ஆஹா.. இது வேற லெவல் உத்தரவு.. பைக் ரேஸில் சிக்கிய இளைஞருக்கு சென்னை ஹைகோர்ட் கொடுத்த நூதன தண்டனை!
சென்னை: பைக் ரேசில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், அவர் ஸ்டான்லி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்தவர் பிரவீன். 21 வயதாகும் இவர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளம் நோக்கி நண்பர்களுடன் பைக் ரேஸ் சென்றுள்ளார். அவர்கள் மீது அப்பகுதியில் பைக் மெக்கானிக்காக உள்ள சார்லஸ் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

ஜாமீன் கோரி மனுத்தாக்கல்
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரவீன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அஜித்குமார் என்பவரது பைக்கில் பின்னால் அமர்ந்து பிரவீன் பயணித்ததாகவும், இதில் அவர் எந்தவிதமான குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை எனவும் வாதிட்டார்.

பின்னால்தான் அமர்ந்து சென்றார்
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரவீன் பைக் ரேசில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுத்ததாகவும், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார். பைக்கின் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்பு கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

நீதிபதி வழங்கிய நூதன உத்தரவு
மனுதாரர் பிரவீனின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுவதாக தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அவர் ஒரு மாத காலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் என்றார். ஒரு மாத காலம் பிரவீன் முறையாக பணிபுரிந்தாரா என்பது குறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications