“விஜய்யை சந்திப்பீர்களா?” ரஜினி சொன்ன பதில்! பஞ்சாயத்து முடியாது போல!
சென்னை: விஜய் முதலமைச்சராக தேர்வாகியிருக்கும் நிலையில், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் நடிகர் ரஜினியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர் அளித்த பதில் கவனம் பெற்றிருக்கிறது.
இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்தார். விஜய் முதலமைச்சரானது குறித்தும், தன் மீது எழுப்பப்பட்ட விமர்சனங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்திருந்தார்.

ரஜினி பேசியது என்ன?
அவர் பேசியிருந்ததாவது, "எனக்கும் விஜய்க்கும் தலைமுறை இடைவெளி இருக்கிறது. ஏறத்தாழ 25 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. நான் விஜய்யை சிறு வயதிலிருந்து பார்த்திருக்கிறேன். அவர் வெற்றி பெற்றது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழச்சிதான். கமல்ஹாசன் முதலமைச்சராக ஆகியிருந்தால் பொறாமை வந்திருக்குமோ என்னவோ! விஜய் முதலமைச்சரானதற்கு நான் ஏன் பொறாமை பட வேண்டும்?" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளித்த ரஜினி, "இல்லை. நடிகர் சங்கத்தினர் போய்விட்டனர். கமல்ஹாசன் சென்று பார்த்துவிட்டார். எனவே, சம்பிரதாயத்திற்கு போய் பார்ப்பது பிடிக்காது" என்று கூறியுள்ளனர்.
பஞ்சாயத்து என்ன?
திரைத்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், அது ரஜினி மட்டும்தான் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இங்குதான் விஜய் போட்டியாக வந்திருந்தார். ரஜினி படத்திற்கு ஒரு தனி ரசிகர்கள் இருப்பதை போல, விஜய் படத்திற்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ஒரு கட்டத்தில் தமிழ் திரைத்துறையில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய பிம்பமாக விஜய் வளர்ந்து மற்ற நடிகர்களை ஓரம் கட்டியிருந்தார்.
அப்போதிலிருந்து விஜய்-ரஜினி ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் மோதிக்கொண்டிருந்தனர். அதிலும் ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றனர். எல்லாம் கொஞ்ச நாள்தான். கடைசியில் ரஜினி அரசியலிலிருந்தே விலகிக்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார். இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏறத்தாழ 60 ஆண்டுகால திராவிட கட்சிகள் தோல்வியை தழுவின. மறுபுறம் தவெக 108 தொகுதிகளில் வென்று கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது.
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விஜய் போய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதேபோல திரைத்துறையினரும் விஜய்யை நேரில் சந்தித்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். கமல்ஹாசன் கூட விஜய்யை சந்தித்திருந்தார். ஆனால் ரஜினி சந்திக்கவில்லை.
இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு "சம்பிரதாயத்திற்கு போய் பார்ப்பது பிடிக்காது" என்று கூறியிருப்பது மீண்டும் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
