மே 13 தொடங்கிய காற்றாலை சீசன்.. முதல் நாளே 57 ஆயிரம் யூனிட்.. தமிழகத்தில் இனி மின்தடை தீருமா?
சென்னை: அக்னி நட்சத்திர வெயில் தமிழகத்தை வாட்டி வதைக்கிறது.. வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே போனாலும் சரி, வெப்பம் தாங்கவே முடியவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்.. இந்த நேரத்தில் மின் விசிறி, குளிர்சாதன பெட்டி எல்லாம் ரொம்ப அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.. அதனால் மாநிலம் முழுவதும் மின்சார தேவை 21 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கி வருகிறது.. சில பகுதிகளில் மின்தடையும் தொடர்கிறது.. இந்த நெருக்கடியான தருணத்தில், காற்றாலை மின்சாரம் மிகப்பெரிய நம்பிக்கையை நமக்கு தந்துள்ளது.. அது என்ன தெரியுமா?
கடந்த 2025ம் ஆண்டு தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. 10,000 மெகாவாட்டுக்கும் அதிகமான காற்றாலை திறன் கொண்ட மாநிலத்தில், செப்டம்பர் 28 அன்று 87.60 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

இது கணிக்கப்பட்ட 87.74 மில்லியன் யூனிட் அளவை விட சற்றுக் குறைவாக இருந்தது. சில பகுதிகளில் மின் உற்பத்தி குறைப்பு (Curtailment) ஏற்பட்டதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
தமிழகத்தில் மின்தடை
இருந்தாலும் மாநிலத்தின் மொத்த மின் தேவை 366.95 மில்லியன் யூனிட் ஆக இருந்த நிலையில், மேகமூட்டம் மற்றும் கனமழை போன்ற சவால்களையும் மீறி அந்த தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டது. அக்டோபர் தொடக்கத்தில் சிறிய சரிவு இருந்தாலும், பின்னர் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது வேறுவிதமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. வழக்கமாக தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை காற்றாலை சீசன் நீடிக்கும்.. ஆனால் இந்த வருஷம் சீசன் மே 13-ந் தேதி தொடங்கியது.. முதல் நாளிலேயே 57 ஆயிரம் அலகு மின்சாரம் உற்பத்தியானது என்பது ஆச்சரியமான விஷயம்.. வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், மின் உற்பத்தியும் தொடர்ந்து கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
காற்றாலை மின் உற்பத்தி
மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 100 மெகாவாட் முதல் 11 ஆயிரத்து 830 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.. காற்று ரொம்ப அதிகமாக வீசும் சீசன் காலங்களில் தினசரி சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.. இது மாநிலத்தின் மொத்த மின்தேவையில் கணிசமான பங்கை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் உள்ளது.. குஜராத் மட்டுமே முன்னிலையில் நிற்கிறது.. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முப்பந்தல் காற்றாலைப் பண்ணை, நாட்டிலேயே மிகப்பெரிய காற்றாலை மையங்களில் ஒன்று.. உலக அளவிலும் இதற்கு தனி இடம் உண்டு என்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
மின்சார தேவை
இந்திய காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சொல்லும்போது, தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு மின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும், வருடத்தில் ஆறு முதல் ஏழு மாதத்துக்கு மட்டுமே சீசன் நீடிக்கும் என்பதால், இந்த காலகட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதே இப்போதைய தேவை, சீசன் முடிந்த பிறகே மின் உற்பத்தி கொஞ்சம் குறையும் என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
கோடை கடந்தாலும், தமிழகத்தில் மின்சார தேவை குறைவதில்லை என்பதே உண்மை.. காற்றாலை சீசன் மட்டுமே போதாது, ஆண்டு முழுவதும் நிலையான மின்சாரம் தர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இன்னும் ரொம்ப அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.. அரசு இதை எந்த அளவுக்கு சீக்கிரமாக செயல்படுத்துகிறது என்பதுதான் இனி மக்களின் கேள்வி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications