பாஜக சீன்லயே இல்ல.. அண்ணாமலை ஊரில் இல்லாததால் சென்னை மழையில் தலையே காட்டாத பாஜக தலைவர்கள்!
சென்னை: கடந்த ஆண்டுகளில் சென்னையில் கனமழை வெள்ளத்தின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கி, திமுக அரசுக்கு பெரிய அளவில் அழுத்தம் கொடுத்து வந்தார். ஆனால், தற்போது அண்ணாமலை லண்டனில் இருக்கும் நிலையில், பாஜக சீனிலேயே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் 2 நாட்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக, சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்தது. கனமழையால் நீர் நிலைகள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு: சென்னை மாநகராட்சி சார்பிலும் தன்னார்வலர்கள் சார்பிலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளச்சேரி, சைதாப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கினார். முழங்கால் அளவு வெள்ள நீரில் நடந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட் போன்றவற்றை வழங்கினார்.
படகில் சென்ற அண்ணாமலை: அதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டில் அண்ணாமலை, படகுகளில் சென்று வெள்ள பாதிப்பை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார். அப்போது குறைந்த அளவிலான மழைநீரில் அண்ணாமலை படகில் சென்றது விமர்சனங்களுக்கும் உள்ளானது. முழங்கால் அளவு கூட தண்ணீர் இல்லாத நிலையில் அவர், விளம்பரத்திற்காக படகில் சென்றதாக திமுகவினர் விமர்சித்தனர்.
பாஜக ஆப்செண்ட்: இந்நிலையில், தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழக பாஜகவினர், சென்னை மழை பாதிப்பு விவகாரத்தில் பெரிதாக களமிறங்கவில்லை. மழை பாதிப்பை முன்வைத்து திமுக அரசை அந்தளவுக்கு விமர்சிக்கவில்லை. தமிழக பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் கூட சென்னை மழை பாதிப்பு பற்றி பெரிய அளவுக்கு பதிவுகள் எதுவும் வரவில்லை.
அண்ணாமலை இங்கு இருந்திருந்தால், நேற்று மழைநீர் தேங்கிய இடங்களுக்குச் சென்று பிரஸ் மீட் கொடுத்து, திமுக அரசை அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பார், ஆனால், தற்போது பாஜக சீனிலேயே இல்லாத நிலை உள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது, பாஜக களத்திலேயே இல்லை என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.
அண்ணாமலை வெளியிட்ட பதிவு: லண்டனில் இருந்தபடியே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படுகிறது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக, கடந்த ஆண்டுகளில், வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முடிந்தவரையிலும், அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று. தமிழக அரசு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மேலும், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90% அளவு நிறைவு பெற்றிருப்பதாக, அமைச்சர்களும், சென்னை மாநகராட்சி மேயர் அவர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறி வருவதால், கடந்த ஆண்டுகளை நினைவில் கொண்டு, தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சாலைகளில் செல்லும்போது, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
கனமழை இன்னும் சில நாட்களுக்குத் தொடர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள், அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், மின்சாரம் தொடர்பான பொருள்களைக் கையாளும்போதும், நீர்நிலைகளிலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். பருவமழையைப் பாதிப்பின்றி எதிர்கொள்வோம்." எனத் தெரிவித்திருந்தார்.
ஸ்கோர் செய்யத் தவறிய பாஜக: தமிழக பாஜகவினர் எவரும், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் கூட ஈடுபடவில்லை, சமூக வலைதளங்களில் உதவிகளுக்கு ஒருங்கிணைக்கும் பணி கூட செய்யவில்லை. அண்ணாமலை தமிழகத்தில் இல்லாததால், சென்னை மழையில் தமிழக பாஜக ஸ்கோர் செய்யத் தவறிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம், முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், மழைநீர் அகற்றும் பணிகளை இடைவிடாமல் ஆய்வு செய்து ஸ்கோர் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
