கவுன்சிலர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் விலக்கு தேவை.. மாமன்ற கூட்டத்தில் கலகல! மேயர் பிரியாவின் ரிப்ளை!
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஒருவர் முன்வைத்த கோரிக்கையால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அவரது கோரிக்கைக்கு மேயர் பிரியா பதில் அளித்தார்.
இன்று சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் கூடியது. துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் சங்கர்லால் குமாவத் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.

அப்போது, திமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் தேவி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். "எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் டூ-வீலரில் ஆய்வுக்குச் செல்லும்போது ஹெல்மெட் அணிவதால் பொதுமக்களால் என்னை அடையாளம் காண முடியவில்லை. எனவே, மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, டூ வீலரில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
கவுன்சிலர் தேவியின் கோரிக்கையால் மாமன்றக் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து கவுன்சிலரின் கோரிக்கைக்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், "ஹெல்மெட் அணிவது நமது பாதுகாப்பிற்காகத்தான். கவுன்சிலர் என்றாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை மீறக்கூடாது. இதில் யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது" என பதில் அளித்தார்.
தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹவுசிங் போர்டு மூலமாக வீடுகள் கட்டப்பட்டுள்ள இடங்களில் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தெருவோரத்தில் இருக்கும் குப்பைகளை உடனடியாக நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும், சாலையில் கொட்டப்படும் குப்பைகளை ஆய்வு செய்து அதற்கு தகுந்தவாறு பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications