சென்னை ஏர்போர்ட்டில் ஷாக்.. அலுவலக அறையிலேயே பெண் அதிகாரி தற்கொலை.. போலீசார் விசாரணை
சென்னை: சென்னை விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளாராக பணியாற்றி வந்த பெண் அதிகாரி நிர்மாலா, இரவு பணியின் போது அலுவலக அறையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகும். தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இங்கு வந்து செல்கின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த விமானத்திற்கு வந்து செல்வதுண்டு.

விஐபிகள், பிரபலங்கள் என பலரும் வருகை தருவதால், சென்னை விமான நிலையம் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி காணப்படும். விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும். இப்படி பரபரப்புக்கும் பாதுகாப்பு கெடுடிபிடியும் நிறைந்த சென்னை விமான நிலையத்திற்குள் பெண் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த விவரம் வருமாறு:
சென்னை விமான நிலைய ஆணையத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் நிர்மலா (வயது 59). சென்னை விமான நிலையத்தில் தகவல் தொடர்பு துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ளது. நேற்று நிர்மலாவுக்கு இரவு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
வழக்கம் போல, உள்நாட்டு முனைய பகுதியில் உள்ள அலுவலகத்தில் பணி செய்தார். அவர் மட்டும் அலுவலகத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. காலையில் நீண்ட நேரம் ஆகியும் நிர்மலாவின் அலுவலக அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிற ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக அவரது உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நிர்மலா மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியானது. சமீபத்தில் நிர்மலாவின் தம்பி உயிரிழந்து விட்டாராம்.
இதனால், மிகுந்த துக்கத்தில் நிர்மலா இருந்துள்ளார். இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற இருந்த பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications