உலக இட்லி தினம் 2021: அனைவரோடும் ஒத்துப்போகும் தன்னிகரில்லாத் தலைவி.. இட்லி பிரியர்கள் கவிதை மழை
உலக இட்லி தினத்தை முன்னிட்டு இட்லியின் பெருமைகளை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இட்லி நேசர்கள் பலரும் கவிதை வடித்துள்ளனர்.
சென்னை: வெள்ளை நிறத்தில் மென்மையாக குட்டி நிலவைப்போல தட்டில் காட்சி தரும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, மணக்கும் சாம்பார், தக்காளி சட்னி, கார சட்னி, மல்லி, புதினா சட்னிகள் தொட்டு சாப்பிடுவார்கள். மிளகாய் பொடியும் நல்லெண்ணெயும் கூட இட்லிக்கு செம காம்பினேசனாக அமையும். இப்படி அனைவரோடும் ஒத்துப்போகும் எங்கள் தலைவியே என்று இட்லிக்கு இணைய தளத்தில் மகுடம் சூட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.
இட்லி இந்தியாவில் தோன்றிய உணவு இல்லை. இந்தோனேஷியாதான் இட்லிக்கு பூர்வீகம். தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவு இட்லி. இந்தியர்களின் மனம் கவர்ந்த உணவு இட்லிதான். வயிறு நிறைய சாப்பிட்டாலும் இதமாக இருக்கும் என்பதாலேயே அனைவராலும் விரும்பப்படும் உணவாக உள்ளது இட்லி.
இட்லியில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் அனைத்தும் உள்ளது. இது வேகவைத்த உணவு என்பதாலும் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியாமானதாக இருப்பதாலும் உலகம் முழுக்க அனைவராலும் விரும்பப்படும் உணவாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு, அதிக உட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது. உலக இட்லி தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் இட்லி பிரியர்கள் அதன் பெருமையை பதிவிட்டு வருகின்றனர்.

இட்லி தினத்தின் வரலாறு
ஆண்டுதோறும் மார்ச் 30 ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இந்த தினத்தை 2015ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடக் காரணமானவர். மல்லிப்பூ இட்லியின் நிறுவனரான இவர், இட்லி செய்வதில் கின்னஸ் சாதனை படைத்தவர். 124 கிலோவில் இட்லி செய்ததற்காக இவர் கின்னசில் இடம்பெற்ற இவர் 2000 வகையான இட்லிக்களை உருவாக்கியவர்.

பரம்பரை சொத்து
தமிழ்நாட்டு காலை உணவின் கெத்து... "இட்லியே" நீ தான் எங்க பரம்பரை சொத்து... மார்ச்-30: உலக இட்லி தினம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

இட்லி மாதிரி மேலே வரணும்
வாழ்ந்தா... இட்லி மாதிரி வாழணும், குழிக்குள் தள்ளினாலும் கும்முனு மேலே வரணும். மார்ச் - 30 உலக இட்லி தினம் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

காதலியும் இட்லியும்
காதலித்துப்பார்
சாதாரண இட்லியும்
கறி இட்லியாக தெரியும்.
காதலித்துப்பார்
சாதாரண கறியும்
ஆமைக்கறியாக தெரியும்.
காதலித்துப்பார்
சாதாரண இட்லியும்
ரவா இட்லியாக தெரியும்.
காதலித்துப்பார்
சாதாரண உப்புமாவும்
இட்லி உப்புமாவாக தெரியும்! என்று கவிதையாக எழுதியுள்ளார் இந்த நெட்டிசன்.

எங்கள் தன்னிகரில்லாத தலைவி
சட்னியானாலும்
சாம்பாரானாலும்
மிளகாய்ப் பொடியானாலும்
அனைவரோடும் ஒத்துப்போகும்
தன்னிகரில்லாத் தலைவி...
நிலாவைப்போல வெள்ளை
உன் ருசிக்கு இல்லை எல்லை...
அனைத்துஅனைத்து
சத்துக்களையும்
உள்ளடக்கியும்
தலைக்கனம் ஏறாத
மிருது உள்ளம்...












Click it and Unblock the Notifications