சர்வதேச கிக்பாக்சிங் போட்டியில் சாம்பியன் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னையில் வரவேற்பு
சென்னை: சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய வீரர்கள், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை உலகக் கோப்பை உஸ்பெகிஸ்தான் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் சமீபத்தில் ஊட்டி மற்றும் திகாவில் நடந்து முடிந்த 7 & 8 வது சர்வதேச பயிற்சி பெற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சேம்பியன்ஷிப் கமிட்டி மூலம் தேர்வான 11 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 6 நாட்கள் நடைபெற்ற போட்டியில் 81 நாடுகளைச் சேர்ந்த 2715 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 55 கிலோ ஜூனியர் எடைப்பிரிவு சுபாஷினி 2 தங்கப் பதக்கங்களையும், 47 கிலோ இளையோர் எடைப் பிரிவு அஷ்வின்.எஸ் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். 65 கிலோ லைட் காண்டாக்ட் & கிக் லைட் பிரிவில் ஜிவந்திகா.எஸ் 2 வெண்கலப் பதக்கங்களையும், 42 கிலோ புள்ளி சண்டைப் பிரிவில் தீபலக்சுமி. வி, 50 கிலோ கிக் லைட் பிரிவில் நிவேதா. எஸ், சீனியர் -94 கிலோ கிக் லைட் பிரிவில் வசீகரன்.எ.பி ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விளையாட்டில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டிலிருந்து 11 பேர் சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனை சாத்தியமாக்கிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வீரர், வீராங்கனைகள் நன்றி தெரிவித்தனர். ஏனெனில் இப்போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் 2 லட்சம் வீதம் 11 வீரர் வீராங்கனைகளுக்கு 22 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை சார்பில் வழங்கியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தாங்கள் இந்த வெற்றியை ஈட்ட முக்கியப் பங்காற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரர்கள், வீராங்கனைகள் நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications