எதுவும் நியாயமாக இல்லை.. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. முதல்வருக்கு சாரு நிவேதிதா திடீர் கடிதம்
சென்னை: சென்னையில் புத்தக கண்காட்சி நடந்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
சென்னையில் 2024 ஆண்டுக்கான சென்னை புத்தக கண்காட்சி கடந்த 3ம் தேதி தொடங்கியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஜனவரி 21 ஆம் தேதி வரை 19 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள்.

பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜனவரி 21 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
கோரிக்கை: சென்னையில் புத்தக கண்காட்சி நடந்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதில், வணக்கம். மிகுந்த கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை.
சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது. சில உதாரணங்கள் தருகிறேன். ஐந்தாறு ஆண்டுகளாக செயல்பட்டு, ஆயிரம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகத்துக்கு புத்தக விழா நிர்வாகத்தினால் ஒரு ஸ்டால் தரப்படுகிறது.
ஆரம்பித்து ஒரே ஆண்டு ஆகி, ஐம்பது புத்தகங்களே பதிப்பித்திருக்கும் பதிப்பகத்துக்கு இரண்டு ஸ்டால் தரப்படுகிறது. இப்படிப்பட்ட நியாயமற்ற ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நடக்கிறது என்று தாங்கள் ஒரு விசாரணைக்குழு அமைத்துக் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இது மட்டும் அல்லாமல் ஏகப்பட்ட குளறுபடிகளோடுதான் சென்னை புத்தக விழா நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், இதுவரையில் இல்லாத வகையில் தமிழக அரசு எழுத்தாளர்கள் மீது கவனம் கொண்டிருக்கிறது.எழுத்தாளர்களுக்கு வீடு தர வேண்டும் என்று நான்தான் குமுதம் பத்திரிகையில் எழுதினேன்.
ஒரே வாரத்தில் தாங்கள் அது குறித்து நடவடிக்கை எடுத்து கனவு இல்லம் திட்டத்தை அறிவித்தீர்கள். அதன் மூலம் பல எழுத்தாளர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு உருவாக்கும் அறிஞர் குழுக்களில் இப்போது எழுத்தாளர்கள் இடம் பெறுகிறார்கள்.
நூலகக் குழுத் தலைவராக கவிஞர் மனுஷ்ய புத்திரன் பதவி அளிக்கப்பட்டிருக்கிறார். இப்படி முதல் முறையாக தமிழக அரசு சமகால இலக்கியத்தின் பக்கமும் எழுத்தாளர்கள் பக்கமும் அக்கறை காண்பித்து வருகின்றது. அதற்காக தமிழக அரசுக்கும், தங்களுக்கும் என் நன்றியும் பாராட்டுகளும்… இப்படிப்பட்ட ஒரு சிறப்பான சூழலில் எழுத்தாளர்களுக்கும், எழுத்தாளர்களின் படைப்புகளை பதிப்பிக்கும் பதிப்பகங்களுக்கும் எதிரான வகையில் இயங்குகிறது சென்னை புத்தக விழா அமைப்பு.
இது பற்றிய என் நியாயமான கவலையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வமுள்ள தங்கம் தென்னரசு, கவிஞர் மனுஷ்ய புத்திரன் போன்றவர்களைக் கொண்டு ஒரு சீராய்வுக் குழு அமைத்து சென்னை புத்தக விழா நடைமுறைகளை சீரமைப்பதற்குத் தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள, சாரு நிவேதிதா என்று கோரிக்கை வைத்துள்ளார். அவரின் இந்த கோரிக்கை சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications