EXCLUSIVE: 190 கோடி டோஸ் போட்டது உண்மையா? தடுப்பூசி போடாமலேயே செலுத்தியதாக வரும் குறுஞ்செய்தி
சென்னை: தமிழ்நாட்டில் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது என குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு தற்போது பள்ளி சிறுவர்கள் வரை அது விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

தடுப்பூசி கட்டாயம்
தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசியால் பின்விளைவுகள் ஏற்படும் எனக்கூறி பலரும் அதை செலுத்தாமல் தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக கொரோனா தடுப்பூசியை மத்திய மாநில அரசுகள் கட்டாயமாக்கின. அதன் பின்பும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முக்கிய இடங்களில் தடை விதிக்கப்பட்டதன் காரணமாகவும், கொரோனா மீதான அச்சத்தாலும் பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

2 வது டோஸ் போட தயக்கம்
2 டோஸ்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திவிட்டனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மற்றும் கட்டாயத்தால் தடுப்பூசி செலுத்தியவர்கள் 2வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

பூஸ்டர் டோஸ்
இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை ஏற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு 9 மாத இடைவெளி கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 60 வயத்துக்கு மேற்பட்டோர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்ட பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தற்போது 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.

190 கோடி டோஸ்
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்ததால் தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தமிழ்நாடு அரசு மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம்களை சில வாரங்களாக நடத்தி வருகிறது. இப்படி நாடு முழுவதும் 190 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தாமலேயே குறுஞ்செய்தி
இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தாமலேயே தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து ரியாஸ் அஹமது என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட்டுடன் பதிவிட்டு உள்ளார். அதில், நேற்று இரவு 8:28 மணியளவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி இருப்பதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

வரிசை கட்டும் புகார்
அப்பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ள சிலர் தங்களுக்கும் இதே போல் கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே தடுப்பூசி செலுத்தியதைபோல் எஸ்.எம்.எஸ் வந்திருப்பதாக கூறி ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். மர்ஜுக் என்பவருக்கு தடுப்பூசி செலுத்தாமலேயே கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியதை போல் எஸ்.எம்.எஸ். சென்றுள்ளது. அதேபோல், காலித் என்பவருக்கும் நேற்று 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதை போல் எஸ்.எம்.எஸ். சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவின் இணையதளம்
இதற்கான சான்றிதழை மத்திய சுகாதாரத்துறையின் கோவின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அதில் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் விபரங்கள் கோவின் இணையதளத்தில்தான் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதை வைத்தே எத்தனை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்படுகிறது. தற்போது வரை செலுத்தப்பட்டதாக கூறப்படும் 190 கோடியில், தவறான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டவர்களும் வருவார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications