அறிவு இருக்கா? என் க்ளாஸ் ரூம என்ன பண்ணி வச்சிருக்கீங்க.. தேர்தல் அதிகாரிகளை விளாசிய யுகேஜி மாணவி
சென்னை: சென்னை அரசு பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சாப்பிட்ட தட்டு, தண்ணீர் பாட்டில், ஜுஸ் பாட்டில் உள்ளிட்டவற்றை வகுப்பறையில் போட்டுவிட்டு சென்றுள்ள நிலையில் யுகேஜி மாணவி அவர்களை கடுமையாக கண்டித்துள்ள வீடியோ பரவி வருகிறது. ‛‛சின்னக்குழந்தைங்க நாங்களே எங்கள் ஸ்கூல்ல சுத்தமாக வைத்திருக்கோம். நீங்கள் பெரிய பெரிய கவர்மென்ட் ஆபிசர்ஸ் தானே சாப்பிட்ட தட்டை குப்பை தொட்டியில் போடனும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா?'' என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சில பூத்களில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனை ஏற்பட்டது. சில இடங்களில் வாக்குவாதம் நடந்தது. இருப்பினும் அந்த பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டன.

இதனால் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் மொத்தம் 69.72 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இந்த ஓட்டுகள் வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் சென்னை முகப்பேர் வேணுகோபால் தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் யுகேஜி படித்து வரும் மாணவி அகிம்சா தேர்தல் அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் வீடியோ வெளியாகி வருகிறது. அதாவது மாணவி அகிம்சாவின் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் முடிவடைந்த பிறகு வகுப்பறையில் குப்பைகளை வீசிவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் அதிகாரிகளை விமர்சனம் செய்து மாணவி அகிம்சா வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாணவி கூறியதாவது:
வணக்கம், என் பெயர் அகிம்சா. நான் சென்னை தொடக்கப்பள்ளியில் யுகேஜி படிக்கிறேன். எல்லோரும் நேற்று ( அதாவது நேற்று முன்தினம்) எலக் ஷனில் ஓட்டு போட்டீங்களா? எங்கள் பள்ளியும் தேர்தலுக்கான பூத்தாக தான் இருந்தது. அதோடு நிலைமையை கொஞ்சம் பாருங்க. என்னங்க பண்ணி வச்சிறீங்க எங்க ஸ்கூல்ல. சாப்பிட்ட தட்டு, குடிச்ச தண்ணீர், ஜுஸ் பாட்டில்.. அதைஅதை அங்கஅங்க அப்படிஅப்படியே போட்டுட்டு போய் இருக்கீங்க.

உங்கள் வீடா இருந்தா இப்படித்தான் போடுவீங்களா?, அதோடு நீங்கள் எல்லோரும் சுவர் எல்லாம் நோட்டீஸ் ஓட்டி கருப்பு கருப்பாக ஆக்கி வச்சிறுக்கீங்க. எங்கள் புது க்ளாஸ் ரூமில்ல செல்ஃப், ஸ்லாப் எல்லாத்தையும் உடைச்சி போட்டுட்டு போய் இருக்கீங்க.. உங்களுக்கு எல்லாம் மனச்சாட்சியே இல்லையா?
சின்னக்குழந்தைங்க நாங்களே எங்கள் ஸ்கூல்ல சுத்தமாக வைத்திருக்கோம். நீங்கள் தான் பெரிய பெரிய கவர்மென்ட் ஆபிசர்ஸ் தானே சாப்பிட்ட தட்டை குப்பை தொட்டியில் போடனும் அப்படிங்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா?''என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மாணவியின் இந்த வீடியோவில் பள்ளி வகுப்பறையில் உணவு சாப்பிட்ட தட்டு, ஜுஸ், தண்ணீர் பாட்டில் குப்பையாக குவிந்து இருப்பதும், உடைந்த ஸ்லாப் உள்ளிட்டவையும் ஒருபகுதியாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தேர்தல் முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதோடு வீடியோ வெளியிட்ட மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications