காலிங்பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த மதுரவாயல் பெண்.. இளைஞர் செய்த காரியம்! சென்னைவாசிகளே அலர்ட்
சென்னை: சென்னை அருகே வானகரம் பகுதியில் அப்பார்ட்மென்ட் குடியிருப்புக்குள் புகுந்து வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கிவிட்டு நகையை பறித்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் சென்னையில் அதிகாலையில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், விமானத்தில் வந்து செயினை பறித்துவிட்டு, மீண்டும் விமானம் மூலமாகவே தப்பி செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் அணிந்திருந்த ஷூ-வை வைத்து போலீசார் விமானத் நிலையத்திலேயே வைத்து கைது செய்தனர்.

சென்னையில் நடந்த சம்பவம்
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் கொள்ளை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து வீட்டில் இருந்த பெண்ணை தாக்கிவிட்டு, அவரின் கழுத்தில் அணிந்திருந்த செயினை இளைஞர் ஒருவர் பறித்து சென்றிருக்கிறார்.

சிசிடிவி காட்சியில் இருந்தது என்ன?
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிசிடிவி காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் வரும் அந்த இளைஞர், பெண்கள் தனியாக இருக்கும் வீடாக பார்த்து காலிங் பெல்லை அழுத்துகிறார். காலிங் பெல்லை அழுத்திவிட்டு சில அடி தூரங்கள் தள்ளி செல்லும் அவர், கதவு திறக்கப்பட்ட பின் சில நொடிகள் அந்த பெண்களுடன் பேசுகிறார்.

செயின் பறிப்பு
அதன்பின் அந்த இளைஞர் அருகில் வரும் போது, வீட்டில் இருந்த பெண் உடனடியாக கதவை அடைக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த இளைஞர் கதவை வேகமாக திறந்து பெண்ணை தாக்கிவிட்டு, அவரின் கழுத்தில் உள்ள தங்க செயினை அறுத்து செல்கிறார். அதன்பின் சாதாரணமாக நடந்து வெளியேறுகிறார். இந்த வீடியோ அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் பெண்
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வானகரம் போலீசார் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். சாதாரணமாக காலிங் பெல்லை அழுத்திவிட்டு செயின் பறிப்பில் ஈடுபடுவது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications