மறைமலைநகர் போலீஸ் ஸ்டேசனுக்கே அல்வா கொடுத்த இளைஞர்.. அசந்த ஐந்து நிமிடத்தில் அப்படி ஒரு சம்பவம்
சென்னை: சென்னையை அடுத்த மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு வடமாநில இளைஞர் தனது பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தனது கையில் இரண்டு செல்போன் வைத்திருந்தார். அதில் ஒரு செல்போனை தனது மேஜையில் வைத்துவிட்டு, இன்னொரு செல்போனில் புகார் தொடர்பாக பேசினார். அப்போது வட மாநில இளைஞர் செல்போனை திருடினார். அவர் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
திருடர்களை கண்டுபிடிக்கும் போலீசிடமே திருடியிருக்கிறார் வடமாநில இளைஞர் ஒருவர்.. கையும் களவுமாக சிக்கியிருக்கிறார். அசந்தால் இன்றைய சூழலுக்கு யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி பணம் பறிக்க பெரிய கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் அசந்தால் திருடி செல்லவும் பலர் தயாராக இருக்கிறார்கள். விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்கள் என்பதுதான் இன்றைய நிலையாகும். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்..

சென்னையின் புறநகர் பகுதி தான் செங்கல்பட்டு அருகில் உள்ள மறைமலைநகர். இங்குள்ள காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜனவரி 6-ந் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் சம்பந்தமாக விசாரணை நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது வடமாநில இளைஞர்கள் உள்பட சிலர், தங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது சட்டம் ஒழுங்கு எஸ்ஐ தனது கையில் வைத்திருந்த 2 செல்போனில் ஒரு செல்போனை தனது மேஜையில் வைத்து விட்டு மற்றொரு போனில் வேறொரு நபரிடம் புகார் சம்பந்தமாக பேசியபடி இருந்தாராம்.
அப்போது தனியாக இருந்த செல்போனை கண்டதும் வடமாநில இளைஞருக்கு புத்தி தடுமாறியிருக்கிறது. சப் இன்ஸ்பெக்டரின் செல்போன் என்று தெரிந்தும். நைசாக 'அபேஸ்' செய்து கொண்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். சப்-இன்ஸ்பெக்டர் 20 நிமிடம் கழித்து தான் மேஜையில் வைத்திருந்த மற்றொரு செல்போன் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். காவல் நிலையத்தில் பல்வேறு இடங்களில் செல்போனை தேடிப் பார்த்துள்ளார். ஆனால் அவரது செல்போன் கிடைக்கவில்லை. காணாமல் போன செல்போன் எண்ணிற்கு போன் செய்தால் அழைப்பை யாரும் எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மறைமலைநகர் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக காவல் நிலையத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை தீவிரமாக ஆய்வு செய்தார். அப்போது புகார் கொடுக்க வந்த வடமாநில இளைஞர் ஒருவர் மேசையில் வைக்கப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்போனை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதைதொடர்ந்து அவர் விசாரணை செய்தபோது காணாமல் போன அவரது செல்போன் பெருங்களத்தூர் அருகே சிக்னல் இருப்பது காட்டியது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் அப்பகுதிக்கு சென்று தனது செல்போனை திருடிய வட மாநில வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த வடமாநில இளைஞரை எஸ்ஐ எச்சரிக்கை விடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மறைமலை நகர் சப்-இன்ஸ்பெக்டர் புகார் ஏதும் வடமாநில இளைஞர் குறித்து தரவில்லை என்று கூறப்படுகிறது. புகார் கொடுக்க வந்த போது, போலீஸ் ஸ்டேசனிலேயே சப்-இன்ஸ்பெக்டரின் செல்போனை இளைஞர் திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications