மண்டைக்கேறிய மது போதை..பட்டா கத்தியால் ஆட்டோவுக்கு பஞ்ச்..! மாத்தூரை மிரளவிட்ட புள்ளிங்கோ! ஷாக்!
சென்னை: சென்னை மாத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை குடிபோதையில் இருந்த இளைஞர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் குடிபோதையில் இளைஞர்கள், மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொள்வது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் சித்திரை திருவிழாவின் போதும், அதற்குப் பிறகும் கஞ்சா போதையில் இளைஞர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டதோடு, சாலையில் சென்ற மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
அதிகரிக்கும் சம்பவங்கள்: குறிப்பாக மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள், சாலையில் சென்றவரை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒத்தக்கடையில் தொடரும் இதுபோன்ற சம்பவத்தால் இரவில் வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடிபோதை இளைஞர்கள்: ஆட்டோக்கள் மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை குடிபோதையில் இருந்த இளைஞர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்து உடைத்துள்ளனர். மாத்தூர் எம்எம்டிஏ மூன்றாவது தெருவில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். தலைக்கேறிய குடிபோதையில் அவர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் திடீரென சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்டுள்ள ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்தனர்.
சிசிடிவி பதிவுகள்: இருந்தும் ஆத்திரம் அடங்காத அவர்கள் அங்கிருந்த வீட்டின் ஜன்னல்களை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த ரகளையில் ஈடுபட்ட நபர்களை மர்ம நபர்களை அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
என்ன காரணம்?: போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அந்த இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் அருகில் வசிக்கும் மற்றொரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் அடிக்கடி தகராறு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் வந்த அவர்கள் ஆட்டோக்கள் மற்றும் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை திவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications