பெத்த மனம் பதறுது..மகனுக்காக சண்டை செய்த நெப்போலியன்! வேட்டையை துவக்கிய போலீஸ்.. பரபர ஆக்சன்!
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து அவரது மகன் குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பப்பட்ட நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ள யூடியூப் வீடியோக்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் யூட்யூப் சேனல்களின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை சைபர் கிரைம் போலீசார் திரட்டி வரும் நிலையில் கைது நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மிக இளம் வயதிலேயே சினிமாவுக்கு அறிமுகமானவர் நெப்போலியன்.. முதல் படத்திலேயே வயதான கேரக்டரில் நடித்தார். அதுவும் நெகட்டிவ் கேரக்டர். நெப்போலியன் என்ற பெயர் பாரதிராஜா வைத்தது என்பது பலருக்கு தெரியாது.
இவர் அமைச்சர் கேஎன் நேருவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தவர் நாயகனாக உயர்ந்து எம்பி ஆகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

இடையே அவ்வப்போது தமிழகம் வந்து சில படங்களில் தலைகாட்டியும் வந்திருக்கிறார். அவருக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தனுஷ். சிறு வயதிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டவர் சக்கர நாற்காலி மூலமே நடமாட முடியும். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உறவினர் அக்ஷயாவை திருமணம் செய்து கொண்டார். நெப்போலியனின் நெருங்கிய உறவினர் தான் அக்ஷயா.ஜப்பானில் திருமணம் நடைபெற்ற நிலையில் மிக பிரம்மாண்டமாக மகனின் திருமணத்தை நடத்திக் காட்டினார் நெப்போலியன்.
இதில் சரத்குமார், மீனா, குஷ்பூ, ராதிகா, சுகாசினி என பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் ஜப்பான் சென்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருமண வீடியோக்களும் வெளியானது. அப்போது தனுஷ் தாலி கட்ட முடியாத நிலையில் அவரது தாயார் தாலியை கோர்த்து கட்டினார். தாலி கட்ட கூட முடியாதவருக்கு எதற்கு திருமணம் என சிலர் தனுஷின் உடல்நிலை குறித்து விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும் அக்ஷயா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது மகனுக்கு நெப்போலியன் திருமணம் செய்து வைத்ததாகவும் விமர்சனம் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த தம்பதி தற்போது வசித்து வருகின்றனர். அவ்வப்போது மகன் தொடர்பான வீடியோக்களை நெப்போலியன் வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட எம்பி கனிமொழி நெப்போலியனின் வீட்டுக்குச் சென்று தனுஷுக்கு பரிசுகள் வழங்கினார். அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக யூடியூப் சேனல்களில் தனுஷின் உடல் நலம் குறித்து பல வீடியோக்கள் வெளியானது. அதில் தனுஷின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நெப்போலியனின் மகன் தனுஷ் உடல்நிலை குறித்து இணையதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. நெப்போலியன் நடத்திவரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் தலைமை மருத்துவர் இந்த புகாரை அளித்திருந்தார்.
அதில், தனுஷ் குறித்தும் அவரது குடும்ப வாழ்க்கை உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. உண்மைக்கு புறம்பான தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசார். தற்போது நெப்போலியன் மகன் குறித்து யூட்யூப் சேனல்களில் பதிவிடப்பட்டிருந்த அவதூறு வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பல்வேறு யூட்யூப் சேனல்களில் இருந்து அவதூறு வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் யூட்யூப் சேனல்களின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருகின்றனர். 15 நாட்களில் வீடியோக்கள் நீக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்திருந்த நிலையில் இரண்டு நாட்களில் வீடியோக்கள் நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது .தொடர்ந்து அவதூறு வீடியோ பதிவிட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications