குழந்தை பாலின சர்ச்சை.. தெரியாம போட்டுட்டேன்! மன்னிப்புக் கோரிய இர்பான்.. ஆனாலும் ஆக்சன் கன்பாஃர்ம்!
சென்னை: கருவில் இருக்கும் தனது குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் இர்பான் மருத்துவத்துறை குழுவிடம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இர்பான் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என மருத்துவத்துறை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் பிரபல யூட்யூபரான இர்ஃபான். அவரது இர்பான்ஸ் வியூ யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியான நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.

அதே நேரத்தில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
சுகாதாரத்துறை: இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது.
கடும் நடவடிக்கை: கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக அரசு விடுத்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே யூட்யூப் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் இர்பான் அந்த வீடியோவை தனது 'இர்பான்ஸ் வியூ’ யூட்யூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார்.
மன்னிப்பு கேட்ட இர்பான்: இந்த நிலையில் இர்பான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே யூடியூபர் இர்பான் மீதான புகார் குறித்து பொது சுகாதாரத்துறை சார்பில் விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ குழுவிடம் வாட்ஸ்ஆப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இர்பான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடவடிக்கை உறுதி: மேலும் பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை நீக்கிவிட்ட நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி தனது ’இர்பான்ஸ் வியூ’ சேனலில் மீண்டும் ஒரு வீடியோ பதிவிடுகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். . அதே நேரத்தில் குழந்தையின் பாலினத்தை இந்தியாவில் அறிவிப்பது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை பொதுவெளியில் வெளியிட்டதை ஏற்க முடியாது என மருத்துவ குழு திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் அவர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்ததாகவும், அவர் மீது விரைவில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications