எப்படி சாத்தியம்? 10 நிமிடத்தில் உணவு டெலிவரி! சொமாட்டோவிடம் விளக்கம் கேட்கும் சென்னை போலீஸ்!
சென்னை: 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என சோமட்டோ (Zomato) நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தினர் தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் போக்குவரத்து நிறைந்த சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி சாத்தியம் தானா என்பது குறித்து போக்குவரத்து போலீசார் Zomato நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் நகரங்களில் வாழும் மக்கள் தங்களுக்கான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் வெயில், மழையில் நனையாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தங்களுக்கான உணவை வாங்கி ருசிக்கின்றனர். காலை முதல் மாலை வரை கணவன், மனைவி என இருவரும் பணிகளுக்கு செல்லும் நிலை இருப்பது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
உணவு டெலிவரி ஊழியர்கள் படும் பாடு... மத்திய அமைச்சருக்கு உருக்கமான கடிதம் எழுதிய கார்த்தி சிதம்பரம்

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்
இதனால் நாளுக்கு நாள் ஆன்லைனில் பதிவு செய்து உணவு, மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வாங்கும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து வருவதோடு, அவர்களுக்குள் கடும் போட்டியும்நிலவுகிறது. குறிப்பாக உணவு டெலிவரி நிறுவனங்கள் உயர்ந்து வருகின்றன.

ரேட்டிங்கால் விபத்து
குறித்த நேரத்தில் உணவு, மளிகை பொருட்களை டெலிவரி செய்தால் அந்நிறுவன ஊழியர்களுக்கு ரேட்டிங் வழங்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. இதனால் பல உணவு டெலிவரி செய்யும் நபர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்வதாகவும், இதனால் விபத்து ஏற்படுவதாகவும் சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு பெருநகரங்களில் குற்றச்சாட்டு உள்ளது. இதை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது போக்குவரத்து போலீசாரும் அந்த நிறுவன ஊழியர்களுக்கு அறிவுரை, எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

சொமாட்டோ நிறுவனம்
இந்நிலையில் தான் Zomato(சொமாட்டோ) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான Zomatoவில் உணவு பதிவு செய்தால் அடுத்த 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புடன் 10 நிமிடத்தில் டெலிவரி
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛10 நிமிடங்களில் Zomato மூலம் உணவு விநியோகம் விரைவில் தொடங்கும்.இதில் உணவின் தரம் 10/10, டெலிவரி செய்யும் நபரின் பாதுகாப்பு 10/10, டெலிவரி நேரம் 10 நிமிடங்களாக இருக்கும். வாடிக்கையாளர் தங்கள் ஆர்டர்களை செய்துவிட்டு காத்திருக்க விரும்பவில்லை. இதனால் மிகக்குறைந்த டெலிவரி நேரத்துக்கு ஏற்ப உணவகத்தை தேர்ந்தெடுப்பது Zomato செயலியில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

சொமாட்டோ இன்ஸ்டன்ட்
Zomato செயலியின் சராசரி டெலிவரி நேரம் 30 நிமிடங்கள் என்பது தாமதமாக கருதப்படுவதால் அதனை 10 நிமிடமாக குறைப்பது என்பது தேவையாக உள்ளது. இதை செய்யாவிட்டால் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாது. இதனால் 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்ய Zomato இன்ஸ்டன்ட் கொண்டு வருகிறோம்'' என கூறியுள்ளார்.

சென்னையில் சாத்தியமா
இந்நிலையில் சென்னை மாநகரில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்பது சிரமமான விஷயமாகும். ஏனென்றால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஆனால் சொமாட்டோ சார்பில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் டெலிவரி நிறுவன ஊழியர்கள் ரேட்டிங்கிற்காக வேகமாக இருசக்கர வாகனங்களில் பயணித்து விபத்துகளை ஏற்படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் 10 நிமிட உணவு டெலிவரி என்பது விபத்துக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விளக்கம் கேட்க முடிவு
இதனால் போக்குவரத்து மிகுந்த சென்னையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்பது சாத்தியமா என்பது குறித்து போக்குவரத்து போலீசார் சொமாட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளனர்.
****