சிறுத்தை சிவா தம்பி நடிகர் பாலாவுக்கு என்னாச்சு?.. வதந்திகளுக்கிடையே மனைவி அளித்த பரபரப்பு விளக்கம்
நடிகர் பாலாவின் உடல்நிலை எப்படியிருக்கிறது என்பது குறித்து அவருடைய மனைவி தகவல்
கொச்சி: கேரளாவின் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நடிகர் பாலாவின் உடல்நிலை குறித்த அப்டேட்டை அவருடைய மனைவி வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் அவரது 3 தம்பிகளில் ஒரு தம்பியாக நடித்திருப்பார் நடிகர் பாலா. இவர் நிஜத்தில் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார். கடந்த 2003 ஆம் ஆண்டு அன்பு என்ற படத்தின் மூலம் பாலா தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பாடகி அம்ருதாவை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கருத்து வேறுபாடு
இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பாலா விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் உள்ளார். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அது போல் பாலா, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

வரவேற்பு இல்லை
ஆயினும் இவருக்கு தமிழில் வரவேற்பு இல்லை. இதனால் அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கு கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்வதில் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரலில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மலையாள பட தயாரிப்பாளர் பாதுஷா தெரிவித்திருந்தார். மற்றபடி பாலா நலமாக இருப்பதாகவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மனைவி
பாலாவை அவருடைய இரண்டாவது மனைவி எலிசபெத், பாலாவின் தாயார் உள்ளிட்டோர் உடனிருந்து கவனித்து வருகிறார்கள். அது போல் அவருடைய முதல் மனைவி அம்ருதாவும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். இந்தநிலையில் நடிகர் பாலாவுக்கு என்ன நிகழ்ந்தது என தெரியாமல் சில யூடியூப் சேனல்களில் வரும் வதந்திகளை நம்பி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

மனைவி விளக்கம்
இதற்காக பாலாவின் மனைவி எலிசபெத் கூறுகையில் கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பாலா சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தற்போது தான் நலமாக இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் பாலா கூறினார் என எலிசபெத் கூறியுள்ளார். எனவே பாலாவின் உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது பாலா மனைவியின் விளக்கம்.












Click it and Unblock the Notifications