வேலை செய்த கடையிலேயே கைவரிசை.. ஒரு கிலோ தங்கநகையுடன் ஓட்டம்.. வடமாநில இளைஞருக்கு வலை
கோயமுத்தூர்: கோவையில் தான் வேலை செய்த தங்க நகைப்பட்டறையில் இருந்தே ஒரு கிலோ தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்ற வட மாநில இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கோயமுத்தூர் வெரைட்டி ஹால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எம்.என்.ஜி தெருவில் தங்க நகைப்பட்டறை நடத்தி வருபவர் மோகன் குமார்.
ராஜவீதி சண்முகா நகர் பகுதியில் வசித்து வரும் இவர் கடந்த 12 ஆண்டுகளாக அங்கு நகைப்பட்டறை கடை நடத்தி வருகிறார்.

காணாமல் போன நகைகள்
இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரமோத் வித்தால் போஸ்லே என்ற 20 வயது இளைஞர் ஒருவர் இவரது நகைப்பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர் உள்பட மேலும் சிலரும் இவரது கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மோகன் குமார் நகைப்பட்டறைக்கு வந்தார். அப்போது அந்த வடமாநில இளைஞரை காணவில்லை. இதேபோல் கடையில் இருந்த சில நகைகளையும் காணவில்லை.

சிசிடிவி கேமரா காட்சிகள்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது மற்ற ஊழியர்கள் யாரும் வேலைக்கு வராத நாளில் வடமாநில இளைஞர் பிரமோத் வித்தால் போஸ்லே சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே செல்வதும்.. பின்னர் தங்க நகைகள் மற்றும் நகைக்கட்டிகளை எடுத்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கிலோ நகைகளுடன் ஓட்டம்
இதைப்பார்த்து அதிர்ச்சிக்குள்ளான மோகன் குமார் இதுதொடர்பான வீடியோ காட்சியை காண்பித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரில் ரூ 50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ 67 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் காணமால் போய் உள்ளதாக புகாரில் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தீவிரமாக தேடும் போலீசார்
மற்ற ஊழியர்கள் கடைக்கு வராத நேரம் பார்த்து கடைக்குள் சென்று தங்க நகைகள் மற்றும் தங்க கட்டியை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்ற வடமாநில இளைஞரை பிடிக்க போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திருடிய இளைஞர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால் அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். வேலை செய்த கடையிலேயே வடமாநில இளைஞர் ஒருவர் தங்க நகைகளை கொள்ளையடித்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications