கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில்! 2 நாளில் 3 பேர் பலி! வனத்துறை முக்கிய எச்சரிக்கை
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில் கடந்த 2 நாட்களில் மலை ஏறிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்து வண்னம் உள்ளனர்.பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபடுகின்றனர். இங்கு வருவோர் அண்மைக்காலமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இங்கு மயங்கி விழுவோரை காப்பாற்ற மருத்துவ வசதிகளும் இல்லை என பக்தர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

மேலும் சீசன் நேரத்திலாவது மருத்துவ முகாம்களை அமைத்து உயிர்களை காக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் கடந்த இரு நாட்களில் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவை சேர்ந்த சுப்பாராவ் (57) 4ஆவது மலையிலும், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35) முதல் மலையிலும் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(46) இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கபட்டு உள்ளதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற போது பாண்டியன் உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரது உடலை மீட்ட மலை அடிவாரம் கொண்டு வந்த வனத்துறையினர் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த மாதம் முதல் இதுவரை வெள்ளியங்கிரி மலைக்கு வந்தவர்கள் 5 பேர் பலியாகிவிட்டனர்.
இதனால் இதய பிரச்சினை இருப்பவர்கள், ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள், வேறு ஏதேனும் உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை 7 மலைகளை கொண்டது. இங்கு 7ஆவது மலையில் உள்ள சிவலிங்கம் இயற்கையாகவே எழுந்த சுயம்பு லிங்கம் ஆகும். இந்த மலையில் சித்தர்கள் ஸ்தூல வடிவில் நடமாடுகிறார்கள் என சொல்லப்படுகிறது.
ஏழு மலைகளைக் கொண்ட இங்கு பங்குனி, சித்திரை மாதங்களில் சிவகோஷம் விண்ணை பிளக்கும். முன்பெல்லாம் இந்த மலைகளுக்கு தவழ்ந்துதான் வர வேண்டும். ஆனால் இப்போது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
செங்குத்தான இந்த மலைப் பகுதியை ஏற சிவன் அருள் இருந்தால்தான் முடியும் என்கிறார்கள். இல்லாவிட்டால் சற்று சிரமம்தான் என்கிறார்கள். அதிலும் முதல் மலை ஏறுவது மிகவும் சிரமமாம். இங்குள்ள வழுக்குப்பாறை, கைதட்டி சுனை உள்ளிட்டவை உள்ளன.
கைத்தட்டி சுனை உள்ள மூன்றாவது மலையில் சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் அங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்குகளில் இருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் மூன்றாவது மலையில் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
பீமன், அர்ச்சுனன் தவம் செய்த இடங்களாக 5ஆவது மலை கருதப்படுகிறது. பிறகு ஆறாவது மலை இறக்கங்களை கொண்டது. இங்கு திருநீற்றுமலை என்ற ஒன்று உள்ளது. இங்குள்ள வெள்ளை நிற மணலை இறைவனுடைய திருநீறாகவே கருதி பக்தர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.
7 ஆவது மலைதான் சவால் நிறைந்தது. முதல் மலையை போல் சிரமங்கள் நிறைந்தது.இங்கு வெள்ளியங்கிரி என்ற சுயம்பு இருக்கிறார். இந்த மலைகளில் அரிய வகை மூலிகைகள் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications