கோவையில் அரசு ஊழியரின் வாழ்நாள் சேமிப்பு.. ஒரே நிமிடத்தில் சாம்பாதித்த 3 பேர்.. சிக்கியது எப்படி?
கோவை: சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் என்பவர், கோவையில் வசித்து வருகிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளோம் என்று கூறியுள்ளார்கள். வங்கிக்கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறி மிரட்டி உள்ளார்கள். இறுதியாக அவரிடம் ரூ.29.45 லட்சம் மோசடி செய்துள்ளார்கள். இந்த மோசடி தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிஜிட்டல் கைது என்பது சட்டத்தில் உள்ள உண்மையான கைது முறையே கிடையாது. ஆனால் பெரும்பாலும் மோசடிக்காரர்களால் மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்கப் பயன்படுத்தப்படும் தந்திரமாக இருக்கிறது. மோசடிக்காரர்கள் பயத்தை உண்டாக்கித்தான் பணம் பறிக்க முயற்சி செய்வது பல இடங்களில் நடந்துள்ளது.

குற்றவாளி என்று கூறி அழைப்பு வந்தால், பதற்றம் அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்திய சட்டத்தில் தொலைபேசி அழைப்பு அல்லது வீடியோ கால் மூலம் 'கைது' செய்ய எந்த விதியும் இல்லை. காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் உங்களைக் கைது செய்ய வேண்டுமென்றால், அவர்கள் அதிகாரப்பூர்வ பிடியாணையுடன் உங்கள் இருப்பிடத்திற்கே வர வேண்டும். எனவே யாராவது டிஜிட்டல் கைது என்று சொன்னால் நம்ப வேண்டாம். கோவையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி 30 லட்சம் வரை ஏமாந்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜனுக்கு 61 வயது ஆகிறது. இவர் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், உங்களின் வங்கிக்கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நடராஜன், என் மீது தவறில்லை என்று கூறி மறுத்தார். ஆனாலும் மர்ம ஆசாமிகள், உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை, நாங்கள் கூறும் தனியார் வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள். அதை சரி பார்த்து விட்டு பணத்தை திருப்பி அனுப்புகிறோம் என்று காவல்துறை போல் தோன்றி மிரட்டி உள்ளார்கள்.
ஒருகட்டத்தில் போலீஸ் தான் அழைப்பதாக நினைத்த நடராஜன், பயந்து போனார். உடனே நடராஜன் ஓய்வு பெற்றபோது வாங்கிய ரூ.29 லட்சத்து 88 ஆயிரம் பணத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியிருக்கிறார். அந்த பணத்தை திருப்பி அனுப்பாததால் சந்தேகம் அடைந்த அதிகாரி, உடனே தனக்கு வந்தசெல்போன் எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தன்னை மர்ம ஆசாமிகள் மோசடி செய்ததை நடராஜன் உணர்ந்தார். உடனே தாமதிக்காமல் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் நடராஜனிடம் டிஜிட்டல் கைது என்று கூறி பணமோசடியில் ஈடுபட்டது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நபீல், ஹாரிஷ், ரமீஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மோசடி செய்த பணத்தில் ரூ.6 லட்சத்தை காசோலை மூலம் எடுத்த போது போலீசில் சிக்கினர். கைதான 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான மோசடி ஆசாமிகள், இது போல் வேறு யாரிடமாவது மோசடி செய்து உள்ளார்களா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications