கோவை அரசு பஸ்சில் வந்த போது பிரசவ வலி.. கர்ப்பிணிக்கு உதவிய முகம் தெரியாத பெண் 'டாக்சி' டிரைவர்
கோவை: கோவையை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 28 வயது பெண், கோவை ரயில் நிலையம் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு அந்த நேரத்தில் வந்த பெண் டாக்ஸி டிரைவர், கொஞ்சமும் தாமதிக்காமல் தனது காரில் ஏற்றிச் சென்று பிரசவ வார்டுக்கு அழைத்து சென்று உதவினார்.
கோவையை சேர்ந்த 28 வயதாகும் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கோவை ரயில் நிலையம் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே கண்டக்டர் பஸ்சை அரசு மருத்துவமனைக்கு ஓட்டி செல்லுமாறு டிரைவரிடம் கூறினார்.

மருத்துவமனை முன்பு பஸ் நின்றதும் அந்த கர்ப்பிணியை மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல சிலர் உதவி கேட்டனர். உடனே அங்கு நின்றுகொண்டு இருந்த பெண் டாக்சி டிரைவர் ரமாதேவி என்பவர் தானாக முன் வந்து அந்த கர்ப்பிணியை தனது காரில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குள் சென்று பிரசவ வார்டில் சேர்த்தார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இது குறித்து டாக்ஸி டிரைவரை ரமாதேவி கூறும் போது, என்னுடைய சொந்த ஊர் தேனி. நான் அங்கு இருந்து கோவைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரை இறக்கி விட்டுவிட்டு, அரசு மருத்துவமனை முன்பு நின்று கொண்டு இருந்தேன். அப்போது அரசு பேருந்தில் வலியால் துடித்த கர்ப்பிணியை பார்த்ததும் எனது காரில் ஏற்றி பிரசவ வார்டு வரை அழைத்து சென்று உதவினேன்" இவ்வாறு கூறினார்.
கோவை போலீசாரின் அதிரடியால் அடுத்தடுத்து கைதான போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள்: கோவை உக்கடம் போலீசார் பேரூர் பைபாஸ் ரோடு மீன் மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்ற போது, கஞ்சா விற்ற கெம்பட்டி காலனியை சேர்ந்த சிவகுரு (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ராமநாதபுரம் சிவராம் நகர் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (33), பீளமேட்டை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 140 போதை மாத்திரை, 2 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், வேலாண்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த சரவணகுமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது போல் கோவில்பாளையம் போலீசார் கீரணத்தம் புதுப்பாளையம் செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த முருகன் என்பவரது மகன் வீரா என்ற வீரக்குமார் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications