கோவையில் சோகம்.. இரு குழந்தைகளுடன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை.. கணவரிடம் போலீஸ் விசாரணை!
கோவை: கோவையில் தனது இரு குழந்தைகளுடன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேபாள நாட்டை சேர்ந்தவர் ராஜ்குமார்(24). இவரது மனைவி டன்கலா(22). இவர்களுக்கு மூன்று வயதில் அலிசா என்ற பெண் குழந்தையும், ஒரு வயதில் ருத்ரா என்ற ஆண் குழந்தையும் இருந்தது. பிழைப்புக்காக இந்தியா வந்த இவர்கள் கோவை குப்பனூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

குப்பனுரில் தங்கி இருந்து தோட்ட வேலை செய்து வருகின்றனர். ராஜ்குமார் இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது மனைவி டன்கலா மற்றும் இரு குழந்தைகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சோகத்தில் அவர் அலறி துடித்தார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக அவர்கள் பேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் டன்கலா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், டன்கலா உடலில் இரத்த காயம் இருந்தததாகவும் தெரிகிறது. டன்கலா மற்றும் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக ராஜ்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications