கோவையில் அறைக்குள் வந்த உருவம்.. உயிரை கையில் பிடித்து பதுங்கிய இளைஞர்கள்.. ஒற்றை யானையால் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிப் பகுதிக்குள் வடமாநில தொழிலாளர்களின் அறைக்குள் புகுந்த ஒற்றை யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை செல்லும் வரை வீட்டுக்குள்ளேயே இருந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை வேடிக்கை பார்ப்பதற்காக விவசாயி வேலுமணி என்பவர் சென்றுள்ளார்.

அப்போது, அவரை யானை தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த யானை தொடர்ந்து தினமும் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிகளாக புகுந்து அதிகாலை வரை விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சென்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஒன்பது மணிக்கு தெற்குபாளையம் அருகே கென்னடி தென்றல் அவன்யூவிற்கு பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது.
யானை புகுந்ததை அறியாத வடமாநில தொழிலாளர்கள் கதவை திறந்து வைத்துக் கொண்டு சமையல் செய்து கொண்டிருந்துள்ளனர். திடீரென வீட்டின் முன்பு வந்த யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு, அறையின் ஓரத்தில் சென்று பதுங்கிக் கொண்டனர். அந்த யானை தலையின் முன் பகுதியை வீட்டின் கதவிற்குள் விட்டு உள்ளே இருந்த ரேஷன் அரிசி டப்பாவை கீழே கொட்டி அரிசியை சாப்பிட்டது.
மேலும், அறைக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை வெளியே இழுத்து வீசியது. அதன் பின் அந்த யானை வெளியே சென்றுவிட்டது. பின்னர், ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அதே வீட்டிற்குத் திரும்பி வந்த யானை அதனுடைய பாதி உடலை வீட்டின் உள்ளே புகுத்தி தும்பிக்கையால் மீண்டும் பொருட்களை தேடியது. அப்போது, உள்ளே பதுங்கி இருந்த தொழிலாளர்கள் பையில் வைத்திருந்த ரேஷன் அரிசியை தூக்கி போட அதை இழுத்துக் கொண்டு வெளியே சென்றது.

இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பட்டாசு வெடித்து அந்த யானையை துரத்தினர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்த ஒற்றை யானை குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் புகுந்து வருவதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். யானையை கண்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும், பொதுமக்கள் தாமாக யானைகளை விரட்ட முயற்சி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications