திருஷ்டி சுற்றி ‛‛வாழ்க வாழ்க’’ கோஷம்.. ரெய்டுக்கு பின் எஸ்பி வேலுமணி வீட்டில் தொண்டர்கள் உற்சாகம்
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை முடித்த நிலையில் அவருக்கு தொண்டர்கள் பூசணிக்காயில் திருஷ்டி சுற்றியதோடு, வாழ்க வாழ்க கோஷமிட்டு அவரை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் உள்ளாட்சி துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார் எஸ்பி வேலுமணி. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எஸ்பி வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல், முறைகேடுகள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக கட்சி கூறியது.

39 இடங்களில் சோதனை
அதன்படி தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை அதிமுகவின் 2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் வீடு உள்பட 13 இடங்களிலும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்பி வேலுமணியின் வீடு அலுவலகம் உள்பட 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.

சோதனைக்கான காரணம் என்ன?
தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கிய புகாரில் விஜயபாஸ்கரின் வீட்டிலும், தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் எஸ்பி வேலுமணியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இன்று மாலை பல இடங்களில் நிறைவு பெற்றது.

திருஷ்டி சுற்றிய தொண்டர்கள்
கோவையில் உள்ள எஸ்பி வேலுமணியின் வீட்டிலும் இன்று மாலை சோதனை நிறைவு பெற்றது. சோதனைக்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த எஸ்பி வேலுமணிக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். வாழ்க வாழ்க என கோஷமிட்ட தொண்டர்கள், பூசணிக்காயில் சூடம் கொளுத்தி அவருக்கு திருஷ்டி சுற்றினர். அதன்பிறகு எஸ்பி வேலுமணி கூறுகையில்‛‛என் வீட்டில் 3வது முறையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என கூறினார்'' என குற்றம்சாட்டினார்.

3வது முறையாக சோதனை
எஸ்பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் டெண்டர் முறைகேடு உள்ளிட்ட புகார்களால் 2 முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். தற்போது நடந்த சோதனை 3வது முறையாக நடந்துள்ளது. முன்னதாக இன்று காலை எஸ்பி வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவு எம்எல்ஏக்களான தாமோதரன், அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராமன், அமுல் கந்தசாமி,வி.பி.கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் தொண்டர்கள் என 100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications