கோவையில் மாணவிக்கு நடந்த கொடூரத்தை கண்டித்து.. அதிமுக, தவெக கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
கோவை: கோவை விமான நிலையம் அருகே மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து இன்று அதிமுக மற்றும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள கல்லூரியில் தங்கி படித்து வந்த மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று முன் தினம் இரவு கோவை விமான நிலையம் அருகே தனது ஆண் நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்த போது, அங்கு மதுபோதையில் வந்த 3 பேர் கும்பல் மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை
மாணவியின் ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு கல்லூரி மாணவியை கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிமுக, பாஜக, தவெக கட்சிகள் இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்தத் தவறிய, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்தும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதிமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில், இன்று காலை 11 மணியளவில், கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக இன்று ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து இன்று கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு தலைகுனியும் அளவிற்கு கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. செவ்வாய்கிழமை மதியம் 12 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இடம்: செஞ்சிலுவை சங்கம், பந்தயச்சாலை, கோவை" எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக ஆர்ப்பாட்டம்
இதேபோன்று பாஜக சார்பிலும் கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக மகளிர் அணி சார்பில் வானதி சீனிவாசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது.
மேலும் குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல சட்டம் இயற்ற வேண்டும். திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து நாளை 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications