விஜயால் தோல்வி பயம்.. நடிகர் அஜித் ரசிகர்களை அரவணைக்கும் அதிமுக.. எஸ்பி வேலுமணியின் ரகசிய ‘மூவ்'
கோவை: நடைபெற உள்ள சட்டசைபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டுள்ளது. இது திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் வாக்குகள் சிதறுவதை தடுக்க கோவையில் அதிமுக வேட்பாளர்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ரசிகர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆதரவு கோரி வரும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த முறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய் 'டாப்' நடிகராக இருந்து அரசியலில் நுழைந்துள்ளார். இதனால் அவர் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள், பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.

இது திமுகவினர், அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என்றாலும் கூட ஒவ்வொரு தொகுதிகளிலும் கணிசமான அளவில் வாக்குகளை அவர்கள் பெறலாம். இப்படி வாக்குகள் சிதறுவது தங்களின் வெற்றியை பாதிக்கலாம் என்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் கருதுகின்றனர்.
அஜித் குமார் ரசிகர்களுடன் சந்திப்பு
இந்நிலையில் விஜயால் சிதறும் வாக்குகளை சரிகட்ட அதிமுக ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ரசிகர்களின் ஆதரவவை கேட்க தொடங்கி உள்ளன. அந்த வகையில் கோவையை சேர்ந்த பிரபலமான அதிமுக தலைவரான எஸ்பி வேலுமணி அஜித் குமார் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதி எஸ்பி வேலுமணியின் கோட்டையாகும். கடந்த 2011, 2016,2021 என 3 தேர்தல்களில் அவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். 2011ல் 53,203 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2016ல் 64,041 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2021ல் 41,630 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற அவர் இந்த முறையும் வெல்லும் முனைப்பில் உள்ளார். தொகுதியில் ஒவ்வொரு ஓட்டுகளும் முக்கியம் என்று அவர் நினைக்கிறார்.
எஸ்பி வேலுமணி சொன்ன வார்த்தை
இதனால் அவர் நடிகர் அஜித்குமார் ரசிகர்களை சந்தித்து வாக்கு சேகரித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் எஸ்பி வேலுமணி அஜித்குமார் ரசிகர்களிடம் பேசுகையில், ''ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அஜித் குமார் அவரை அடிக்கடி சந்தித்து வந்தார். ஜெயலலிதா மீது அஜித்குமார் மரியாதை வைத்திருந்தது அனைவருக்கும் தெரியும். நாங்களும் அஜித் குமார் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறோம்.
ஜெயலலிதா மறைந்தபோது, வெளிநாட்டில் இருந்த அஜித் குமார் திரும்பி வந்து, அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினார். வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக ஆட்சி நிச்சயம் வரும். நீங்கள் (அஜித் குமாரின் ரசிகர்கள்) எங்களுக்கு ஆதரவளித்தால் அந்த வாய்ப்பு மீண்டும் ஏற்படும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டம் ஒழுங்கு மேம்படும்'' என அவர் கூறியுள்ளார்.
ரஜினி ரசிகர் மன்றத்துடன்..
அதேபோல் எஸ்பி வேலுமணியின் சகோதரர் கோவையில் தனியார் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்தி்ன ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். இதுபற்றி அதிமுகவினர் கூறுகையில், ''விஜய் இந்த தேர்தலில் போட்டியிடுவதால், அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்குகள் செல்வதைத் தடுக்கவும், அதிக வாக்குகளைப் பெறவும் அதிமுக பிற முன்னணி நடிகர்களின் ரசிகர்களின் ஆதரவை பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
எடப்பாடி பிரசாரத்திலும்...
இது ஒருபுறம் இருக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அவரும், அஜித்குமாரும் சேர்ந்து இருக்கும் போட்டோ பிரேம்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியிலும் அஜித்குமார் ரசிகர்களின் வாக்குகளை அதிமுக பக்கம் இழுப்பது தான் நோக்கமாக உள்ளது. இதன்மூலம் அதிமுக தலைவர்கள் எப்படியாவது அஜித்குமார் ரசிகர்களின் ஓட்டுகளை தங்கள் வசமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications