பதவி சுகத்திற்காக பாஜகவுடன் உறவாடிய திமுக.. சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரண்.. எடப்பாடி பேச்சு
கோவை: கடந்த காலத்தில் பதவி சுகத்திற்காக பாஜகவுடன் திமுக உறவாடியது என்றும், எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுகவில் சாதி மதம் இல்லை, ஆண் ஜாதி, பெண் ஜாதி மட்டுமே உள்ளது என்று கருத்தம்பட்டி கிறிஸ்தவ மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பேசினார். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- பதவி சுகம் வேண்டும் என்றால் கொள்கையை காற்றில் பறக்க விடுவது தான் திமுக தலைவர்கள்.. கடந்த காலத்தில் பாஜகவுடன் திமுக ஒட்டி உறவாடி பதவி சுகத்தை அனுபவித்ததை மக்கள் மறந்துவிடுவார்கள் என நினைக்க வேண்டாம்.

அதிமுக என்பது ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மக்களையும் சமமாக.. உண்மையாக மதிக்க கூடிய இயக்கம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம், அவர்களுடைய மதம் அவர்களுக்கு புனிதமானது. இது ஒரு ஜனநாயக நாடு, இந்த பெரிய ஜனநாயக நாட்டில் அவரவரர் மதத்தை சார்ந்தவர்கள் அவரவர்கள் கடவுளை வணங்குவது அவர்களுடைய சுதந்திரம். இதை தான் அதிமுக தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
எப்படி ஏமாற்றுகிறார்கள்?: அதிமுக சாதி மதம் இல்லை, ஆண் ஜாதி, பெண் ஜாதி மட்டுமே உள்ளது. இளைஞர்களை அதிகம் கொண்ட கட்சி அதிமுக தான். இளைஞர்கள் அதிமுகள்ள கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும். திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகளை அளித்தது. இப்போது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாகவும் சொல்கிறார்கள்.
திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் பஸ்சில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது. இப்போது பேருந்தின் முன்னும் பின்னும் பிங்க் கலர் அடித்து வைத்துவிட்டு, அதில் ஏறினால் மட்டுமே மகளிருக்கு இலவச பயணம் என்று சொல்கிறார்கள். எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்க..
அரசு ஆஸ்பத்திரி: அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று சொல்லிவிட்டு தற்போது குறிப்பிட்ட பஸ்சில் மட்டும் தான் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியும் என்று சொல்கின்றனர். இது குறித்து சட்டசபையில் கேட்ட போது எங்கே அப்படி இருக்கிறது. எனக்கு காட்டுங்கள் என்று சாக்கு போக்கு கூறுகிறார். சட்டசபையில் எல்லாம் பதிவாகி தான் உள்ளது.
இதேபோல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்றும் , காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்துங்கள் என்று அமைச்சரிடம் சொன்னால் அவர் எனக்கு பட்டப்பெயர் வைக்கிறார். இப்போது அரசு ஆஸ்பத்திரிக்கு கையோடு போனால் கை இல்லாமலும், காலோடு போனால் கால் இல்லாமலும் தான் திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியில் இப்படியா இருந்தது...
பாதுகாப்பு அரணாக: கை இல்லாதவர்களுக்கு கை பொறுத்தப்பட்டது. கால் இல்லாதவர்களுக்கு கால் பொறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்தது. தற்போது மக்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கே பயப்படுகின்றனர். நிறைய அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்துகளே இல்லை. முறையான சிகிச்சைகளும் இல்லை.
கச்சத்தீவை வாரி வழங்கியதன் காரணமாக அங்குள்ள அந்தோணியார் ஆலயத்துக்கு செல்ல கிறிஸ்தவர்கள் இலங்கையிடம் கையேந்தி நிற்க்கின்ற நிலை இருக்கிறது. ஆனால் எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும். இந்த மாநாட்டில் நீங்கள் விடுத்த கல்லறை தோட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் கண்டிப்பாக அதிமுக ஆட்சி வந்ததும் நிறைவேற்றப்படும். இப்போது நீங்கள் திமுகவின் தந்திரத்தை புரிந்துகொண்டிருப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications