அராஜகம் நடக்குது.. கோவை தெற்கில் தேர்தல் ரத்து செய்யணும்.. அதிமுக வேட்பாளர் தர்ணா
கோவை: கோவை தேர்தல் களம் கொதிகொதித்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக புகார் கொடுத்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலை ரத்து செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் , அதிமுக பாஜகவினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆளுங்கட்சிக்கு சாதகம்
அம்மன் அர்ஜுனன் காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தார். "திமுக பகுதி செயலாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படைக்கு இரவு 8 மணிக்கு தகவல் கொடுத்தோம். அங்கு 3 கோடி ரூபாய் பணம் இருந்ததை எங்கள் நிர்வாகிகள் பார்த்தனர். அதிகாரிகள் 11 மணிக்கு மேல் தான் சம்பவ இடத்திற்கு வந்தனர். பறக்கும் படை என்றால் பறந்து வர முடியுமா என்று கேட்கிறாக்ள்.
மாவ்ட்ட தேர்தல் அதிகாரியை இங்கு வரச் சொல்லுங்கள். எனக்கு தேர்தல் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை. எங்களை கைது செய்து கொள்ளுங்கள். இப்போதும் கரூர் ஆட்கள் கோவை லாட்ஜில் தங்கியுள்ளனர். அவர்களிடம் எந்த ஆவணமும் வாங்காமல் தங்கவைத்துள்ளனர். பணம் பிடித்தால் கூட ஆளுங்கட்சிக்கு பயந்து வாழ்கிறார்கள்.
வாக்குவாதம்
நான் ஒரு மக்கள் பிரதிநிதி. கலெக்டரை இங்கே வரச்சொல்லுங்கள். காவல் நிலையத்திற்குள் நுழைந்து திமுகவினர் ரவுடியிசம் செய்கிறார்கள். இங்கு தேர்தலை ரத்து செய்தே ஆக வேண்டும். மக்களை அசிங்கப்படுத்துகிறார்கள். அவர்களை காப்பாற்றியாக வேண்டும்" என்று காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது அங்கிருந்த அதிமுக மற்றும் பாஜகவினர் "ரத்து செய்.. ரத்து செய்.. கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்" என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மன் அர்ஜுனன், "பணம் கொடுக்கிறார்கள் என்று புகார் அளித்தும், கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் கண்ணை கட்டி கொண்டிருக்கிறார்கள்.
கலவர பூமி
கோவையை கலவர பூமியாக்க வேண்டும் என்று பணியாற்றி வருகிறார்கள். மக்களை பற்றி அக்கறை இல்லாமல், பணம் சிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அராஜகத்தன் உச்சம் கோவையில் நடக்கிறது. சாதாரண மக்களை கொடுமைப்படுத்தும் அதிகாரிகள், பணத்துடன் அளிக்கும் புகார்களில் நடவடிக்கை எடுப்பதில்லை. கோவையில் தேர்தலை ரத்து செய்து, அமைதியான பிறகு தேர்தலை நடத்த வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரியும் மெத்தனமாக செயல்படுகிறார். நேற்று அவரிடம் ஒரு புகார் அளித்தேன். விசாரித்து அழைக்கிறேன் என்றவர் இப்போது வரை அழைக்கவில்லை. எங்கள் அழைப்பையும் ஏற்கவில்லை. அதனால் தான் தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தர்ணா தொடரும்" என்றார்.












Click it and Unblock the Notifications