8 ஆண்டுகள்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுகவே காரணம்.. சொல்கிறார் அண்ணாமலை!
திருப்பூர்: 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதம் ஆவதற்கு திமுகவே காரணம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை கூட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்யாதது ஏன் என்று கேள்வியை அண்ணாமலை, மாநில அரசின் எந்த ஒத்துழைப்பும் இன்றி எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இதனால் தென் மாவட்ட மக்கள் சோர்வடைந்தனர்.

15 ஆண்டுகளாக காத்திருக்கும் மதுரை
2011ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுரை மாவட்டத்தில் NIPER அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மதுரை மாவட்டத்தில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான நிலம் கையப்படுத்தும் பணிகளும் நடந்து முடிந்தன. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த போதும் இதுவரை இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
இதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பும் போகுமோ என்று சாமானிய மக்களிடையே பேச்சுகள் எழுந்தது. இதன்பின் ஒரு வழியாக 2024ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில், ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் இரு கட்டங்களாக கட்டப்படுகிறது. அதற்கான 3டி மாடல் வீடியோவும் வெளியிடப்பட்டது.
பிரதமர் மோடி திறக்கிறாரா?
இந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி மதுரையில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை தமிழிசை செளந்தரராஜன் கூறி இருந்தார். ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் அனுமந்த ராவ் மறுத்தார். கட்டுமான பணிகள் முடிவடைய ஜூன் மாதமாகிவிடும்.
மத்திய அரசு மறுப்பு
இதன்பின் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களை மதுரைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறி இருந்தார். அதேபோல் மத்திய அரசும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் இருப்பதாக தெரிவித்திருந்தது. இதனால் பிரதமர் மோடியின் பயணத்தின் போது மதுரை எய்ம்ஸ் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியானது.
அண்ணாமலை பேட்டி
இதுதொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை, 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் அதிகளவிலான மருத்துவக் கல்லூரி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் முழு பயன்பாட்டிற்கு வரும். அதனை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் ஏன் செல்லவில்லை?
ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஒருமுறையாவது முதல்வர் ஸ்டாலின் பார்த்தாரா? மதுரைக்கு எத்தனை முறை ஸ்டாலின் செல்கிறார்.. ஒருமுறையாவது எய்ம்ஸ் கட்டடம் எப்படி கட்டப்பட்டு வருகிறது.. தாமதமாகிறது என்றால், உடனடியாக மத்திய அரசிடம் பேசலாம் அல்லவா? மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரக் கூடாது என்று ஸ்டாலின் பணியாற்றினார்.
தாமதம் ஏன்?
நிலம் கையகப்படுத்த தாமதம் செய்தார்கள்.. மரங்களை வெட்ட தாமதம் செய்தார்கள்.. எல்லாவற்றையும் தாண்டி மதுரை எய்ம்ஸ் கட்டுமான நடந்து வருகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பு இன்றி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். எய்ம்ஸ் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications