1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோவையில் தோல்வி.. “டபுளா உழைப்பேன்”.. அண்ணாமலை சொன்ன விஷயம்!
கோவை: கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், தொடர்ந்து கோவை தொகுதி மக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ப. ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை இராமச்சந்திரன், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 21 லட்சத்து 06 ஆயிரத்து 128 வாக்காளர்களில், 13 லட்சத்து 66 ஆயிரத்து 597 பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இது 64.90 சதவீதம்.

கோயம்புத்தூரில் மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்து இறுதிச் சுற்றான 24 வது சுற்றுவரை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இறுதியில், கணபதி ப.ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கணபதி ராஜ்குமார் பெற்ற மொத்த வாக்குகள் 5,68,200. பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகள், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 82,543 வாக்குகளும் பெற்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அண்ணாமலை, லோக்சபா தேர்தலில் கோவையில் தோல்வியைச் சந்தித்துள்ளார். தோல்விக்குப் பிறகு எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.
அதில், "கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications