செந்தில் பாலாஜி "அசைன்மென்ட்".. எடப்பாடி அசந்த நேரத்தில் தூக்கும் ஸ்டாலின்.. அந்த 3 நாட்கள் பிளான்!
கோயம்புத்தூர்: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், ஆளும் திமுக கொங்கு மண்டலம் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது. அதிமுகவை சேர்ந்த கொங்கு மண்டல நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய இருக்கிறார்கள்.
Recommended Video
அதிமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பின்னர் டிடிவி தினகரன் கேம்பிற்கு சென்று அதன்பின் திமுகவிற்கு வந்தார். இவர் திமுகவில் இணைந்ததில் இருந்தே கரூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் திமுக வேகமாக வளர்ந்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்திலும், சட்டசபை தேர்தலிலும் கரூரிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையிலும் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் திமுக சிறப்பாக செயலாற்றியது.
இடைப்பட்ட காலத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் கொத்து கொத்தாக செந்தில் பாலாஜி மூலமாக திமுக பக்கம் தாவினார்கள்.
அதிமுக அலுவலக சாவி வழக்கு.. தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு! இபிஎஸ், வருவாய்த் துறைக்கு நோட்டீஸ்

என்ன நடந்தது?
தற்போது அதிமுகவில் கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. ஒரு நாள் அதிமுகவில் ஒற்றை தலைமை இருந்தால் மறுநாள் இரட்டை தலைமை இருக்கிறது... எப்போது யார் தலைவர்.. எப்போது பொதுக்குழு மீண்டும் கூடும்.. கட்சியின் பொருளாளர் யார்.. கட்சியில் யாருக்கு பவர் அதிகம் என்று தெரியாத அளவிற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் குழம்பி போய் உள்ளனர். இரட்டை தலைமையின் மோதலால் கீழே அடிமட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.

மாற்றம்
அதிலும் சமீபத்தில் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலிலும் முக்கியமான பல நிர்வாகிகள் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்தனர். இரட்டை தலைமை மோதல் காரணமாக ஒரு சில நிர்வாகிகள் ஓரம்கட்டப்பட்டனர். நீங்க ஓபிஎஸ் ஆள் என்று கூறி கொங்கு மண்டலத்திலேயே சிலரை எடப்பாடி ஓரம் கட்டி உள்ளார். அதேபோல் இளங்கோவன் போன்றவர்களுக்கு சேலம் நகர்ப்புற மாவட்ட செயலாளர் பதவிகளை கொடுத்துள்ளார். இதை அதிமுகவில் பல தலைகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின் பயணம்
அதிமுகவில் இந்த மோதல் நிலவும் நிலையில்தான் 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலம் செல்கிறார். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு 24, 25, 26 ஆகிய நாட்களில் செல்கிறார். இதில் இரண்டாம் நாள் அதிமுக, பாஜகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் மொத்தமாக திமுக பக்கம் செல்ல இருக்கிறார்கள். இதற்கான மாபெரும் இணைப்பு விழா நடக்க உள்ளது. அதிமுகவில் மோதல் நிலவி வந்த நிலையில்.. செந்தில் பாலாஜி இந்த அசைன்மென்டை எடுத்து எடுத்து செய்துள்ளார்.

அதிருப்தி
அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை திமுக கொண்டு வருவதற்கான வேலைகளை செய்துள்ளார். இதன் விளைவாக அதிமுகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் முதல்வர் வருகையின் போது அவர் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர். உட்கட்சி பிரச்சனையால் அதிமுக அசந்த நேரத்தில் அக்கட்சியின் கோட்டையிலேயே பல நிர்வாகிகள் திமுக பக்கம் தாவ முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கொங்கில் திமுக காய் நகர்த்தி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.