துணை முதல்வரா? முதல்வராக கூட திருமாவளவனுக்கு வாய்ப்பு! கொளுத்தி போட்ட வன்னியரசு! அப்போ விஜய்?
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதல்வராக கூட வாய்ப்புள்ளது என்ற ஒரு கருத்தை விசிக எம்எல்ஏ வன்னியரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்தும் அவர் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கு காங்கிரஸ், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இச்சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவிருக்கிறார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நியூஸ் 18 சேனலுக்கு வன்னியரசு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதே எங்கள் நீண்டகாலக் கோட்பாடு. தற்போதைய சூழல், அதனை ஒரு வெளிப்படையான வடிவிற்கு இட்டுச்செல்லும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். தலைவர் திருமாவளவனின் வழிகாட்டுதல்களின்படியே, ஆதரவு முடிவை நாங்கள் மேற்கொள்வோம். அவரது அதிகாரபூர்வ அறிவிப்பிற்காகத்தான் காத்திருக்கிறோம்.
நான் ஒரு சாதாரண தொண்டன். சட்டசபை உறுப்பினராகும் பெரும் வாய்ப்பை தலைவர் திருமாவளவன்தான் எனக்கு வழங்கினார். திருமாவளவன் துணை முதல்வர் மட்டுமல்லாது, முதல்வராகவும் ஆகும் வாய்ப்பு உள்ளது," என்றார்.
மேலும் விசிகவில் வென்றவர்களில் நீங்களும் ஜோதிமணி (காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ) ஆகியோர்தான். அப்படியிருக்க சீனியரான உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு வன்னியரசு, "தலைவர்தான் முடிவு எடுப்பார். அது போல் திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வருகின்றன. அதையும் திருமாதான் முடிவு செய்வார்" என வன்னியரசு தெரிவித்துள்ளார்.
மேலும் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என உயர்நிலை மட்ட கூட்டத்தில் பங்கேற்ற பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு வன்னியரசு, "துணை முதல்வர் பதவி என்ன, முதல்வராகவும் கூட திருமாவுக்கு வாய்ப்புள்ளது. இதுதான் என்னோட இலக்கு" என தெரிவித்திருந்தார்.
சென்னையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளிக்க, ஆட்சியில் பங்கு மற்றும் துணை முதலமைச்சர் பதவி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உயர்மட்டக் குழு வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விசிக எம்.எல்.ஏ. வன்னியரசுவின் ஒரு சமூக வலைதளப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியரசு தனது X தளத்தில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமாவளவன் காலம், இனி உயர்வோம் மேலும் மேலும்!" எனப் பதிவிட்டார். இப்பதவு, விசிக தலைவர் திருமாவளவன் துணை முதல்வராகப் பொறுப்பேற்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மேலும் வலுசேர்த்தது.
போதிய பெரும்பான்மை இல்லாததால், தவெக ஆட்சியமைக்கப் போராடி வருகிறது. 108 எம்.எல்.ஏ.க்களுடன் தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சியமைக்க மேலும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்தச் சூழலில், தவெக தலைவர் விஜய், கட்சிகளிடம் ஆதரவு கோரினார்.
காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ.க்களுடன் ஆதரவை வழங்கியது. சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளும் தங்களின் ஆதரவைக் கடிதம் வாயிலாகத் தெரிவித்தன. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமையவே தவெகவுக்கு சிபிஎம், சிபிஐ ஆதரவு" என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் குறிப்பிட்டார். எனினும், அக்கட்சிகள் அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிப்பதாகத் தெளிவுபடுத்தின.
விசிக இதுவரை தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், வெளியிலிருந்து ஆதரவா அல்லது அமைச்சரவையில் இடம் கோருமா என்பது முடிவாகவில்லை. விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தனது X பக்கத்தில், "தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம். எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை... நாளைய பொழுது நமக்காய் விடியும்" எனப் பதிவிட்டு, கட்சியின் நம்பிக்கையை உணர்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications