இறுதிக்கட்டத்தை நெருங்கிய அவிநாசி மேம்பாலப் பணி.. நள்ளிரவில் ஆய்வு செய்த ஆட்சியர்.. விரைவில் திறப்பு
கோவை: கோவையின் இதயப் பகுதியான அவிநாசி சாலை, சென்னை அண்ணா சாலைக்கு நிகராக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு மேம்பால கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இப்பணி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் ரயில்வே கடவு இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவிநாசி மேம்பாலம் திறக்கப்படுவது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக கோவை விளங்கி வருகிறது. கோவை மாநகரில் மக்கள் தொகை நெருக்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவையின் இதயப் பகுதியான அவிநாசி சாலையில் பிரதானப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். இந்த போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில் மேம்பால கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப்பணி துவங்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. 95 விழுக்காடு பணிகள் முடிந்து விட்ட நிலையில் அதன் இறுதிக் கட்டமாக ஹோப் காலேஜ் பகுதியில் இரயில்வே பாலத்தின்மேல் இரும்பு மேல்தளம் அமைத்து மேம்பாலத்தை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஹோப்ஸ் பகுதியில் ஏற்கனவே ரயில்வே மேம்பாலம் இருக்கும் இடத்தில் தூண்கள் அமைக்க முடியாது என்பதால் அங்கு 52 மீட்டர் இடைவெளிக்கு இரும்பு கார்டர் கொண்டு பாலத்தை இணைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஹோப்ஸ் ரயில்வே மேம்பாலத்தின் பகுதியில் உயர்மட்ட மேம்பால பணிகள் மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.
இப்பணிகளுக்காக, ஜூலை 13 ஆம் தேதி வரை இரவு நேரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதுடன், ரயில் பாதையில் இரவு நேரத்தில் ரயில்களும் மாற்று பாதையில் அனுப்ப திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நள்ளிரவில் இரும்பு கார்டர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர். ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு கார்டர் அமைக்கப்பட்ட உடன் அடுத்த சில வாரங்களில் உயர்மட்ட மேம்பாலத்தினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications