அவிநாசி சாலை மேம்பாலம் காலம் காலமாக எடப்பாடியார் பெயரைத்தான் சொல்லும் – வேலுமணி பன்ச்
கோவை: கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி சாலை மேம்பாலம் நேற்று திறக்கப்பட்டது. தமிழகத்தின் நீளமான மேம்பாலம் என்று பெயரெடுத்த இந்த பாலத்தின் பெயர், அதற்கு உரிமை கொண்டாடுவது உள்ளிட்ட பலவற்றில் திமுக அதிமுக இடையே விவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மேம்பாலத்தை ஆய்வு செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, இந்த மேம்பாலம் காலம் காலமாக எடப்பாடியாரின் பெயரைத்தான் சொல்லும் என்று திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தின் இதய பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. அங்கு உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி அதிமுக ஆட்சியில் தொடங்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த பாலத்தை நேற்று பொது மக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தார். முன்னதாக மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அதிமுக ஆய்வு
இந்நிலையில் பாலத்தை கட்டியது அதிமுக. திமுக அதற்கு பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டுவதாக அதிமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோல்டுவின்ஸ் பகுதியில் மேம்பாலத்தை ஆய்வு செய்தார். பிறகு அதிமுக சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, "கோவை மாவட்டத்திற்கு 50 வருடங்களில் இல்லாத வளர்ச்சியை 5 வருடங்களில் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கோவை மாவட்டத்திற்கு கேட்ட திட்டங்களை வாரி வழங்கினார். அந்த வகையில் கோவையின் மையப் பகுதியாக அவிநாசி சாலை உள்ள்து. கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், வெளியூர்களை இணைக்கும் பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது.
திமுக தாமதம்
இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்கிற பொது மக்களின் கோரிக்கையை அதிமுக ஆட்சியில் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். ஆய்வில் மேம்பாலம் அமைக்க ரூ.1,600 கோடி ஆகும் என்று வந்ததால் அதிகாரிகள் தயங்கினார்கள். இருப்பினும் எடப்பாடியார் கோவைக்கு இந்தத் திட்டம் வரவேண்டும் என்று உறுதியாக இருந்து திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார். கொரோனா காரணமாக உடனடியாக பணி தொடங்க முடியவில்லை.
ஆனாலும் அதிமுக ஆட்சியிலேயே 55 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டது. 2021 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஒன்றரை வருடம் பணிகள் மந்தமாக சென்றது. தாமதப்படுத்தாமல் செய்திருந்தால் 2 வருடங்களுக்கு முன்னரே மேம்பாலத்தை திறந்திருக்கலாம். கோவை மாவட்டத்திற்கு அதிகளவு மேம்பாலங்களை கொண்டு வந்தது எடப்பாடியார் ஆட்சியில் தான்.
எடப்பாடியார் பெயர் தான்
திமுக திறந்து வைத்தாலும், இந்த மேம்பாலமும் காலம் காலமாக எடப்பாடியார் பெயரைத்தான் சொல்லும். அவர்தான் இதற்கு நிதி ஒதுக்கினார். இந்த மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் வைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். இதே பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பதாக திமுக கூறியுள்ளது. அதற்கு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும். கடந்த 4.5 வருடங்களில் கோவைக்கு திமுக எதுவும் கொண்டு வரவில்லை.
அவிநாசி அத்திக்கடவு திட்டம் 2, சிங்காநல்லூர் மேம்பாலம், சரவணம்பட்டி மேம்பாலம் ஆகியவற்றை எடப்பாடியார் அறிவித்து, திமுக அதை நிறைவேற்றாமல் இருக்கிறது. 2026 தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, விடுபட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இது தமிழ்நாட்டிலேயே பெரிய மேம்பாலம். சிசிடிவி கேமரா வைத்து, வேகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications