"டைம் வேஸ்ட்.. பொய் சொல்றதுக்காகவே அண்ணாமலை பிரஸ் மீட் நடத்துறார்” - விளாசிய அமைச்சர்!
கோவை : பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
Recommended Video
கோவை நவ இந்தியா பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டி போட்டு வேலை செய்யுங்கள்
இந்தக் கூட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, "மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து தொண்டர்கள் செயல்படவேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் ஆளுக்கு ஒரு பூத் எடுத்திருந்தால் கோவையில் சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருப்போம். அணிகள் போட்டி போட்டு செயல்பட வேண்டும். கருணாநிதி பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் திருவிழா போல கோலாகலமாக நடத்த வேண்டும். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும். மக்களுக்கு பயனுள்ள நிகழ்வாக நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

திராவிட மாடல் பயிலரங்கம்
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 400 இடங்களில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று ஓராண்டு சாதனையை துண்டு பிரசுரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதியிலும் திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பணிகள்
கோவையில் சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பாலங்கள் விரைவில் திறக்கப்படும். குடிநீர் தேவைகளை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி சரி செய்யப்படும். தனியார் பேருந்துகளில் அதிவேகத்தை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். மருதமலையில் சிறுத்தை நடமாட்டம் நிலவுவதையொட்டி சிறுத்தையைப் பிடிக்க பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

அண்ணாமலை
மேலும் பேசிய செந்தில் பாலாஜி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. அவரைப் பற்றி எழுதியும், பேசியும் பத்திரிகையாளர்கள் தங்கள் பக்கத்தையும் தொலைக்காட்சிகள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications