உமா கார்கி ஜாமீனில் விடுதலை.. திமுக மற்றும் விஜய் பற்றி இழிவாக ட்வீட் செய்த 2 வழக்குகளிலும் பெயில்!
கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஜக ஆதரவாளர் உமா கார்கி என்ற உமா கார்த்திகேயன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்த இரு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து உமா கார்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். இவர் உமா கார்கி என்ற பெயரில் பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும், திமுக தலைவர்களையும் கடுமையான சொற்களால் ட்விட்டரில் விமர்சித்தும் வந்தார்.

சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை உமா கார்கிக்கு அண்மையில் விருது வழங்கியிருந்தார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக திமுகவினர் அளித்த புகாரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் உமா கார்கியை கடந்த ஜூன் 20ஆம் தேதி கைது செய்தனர்.
உமா கார்கி மீது, கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
சமூக வலைதளங்களில் திமுக குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் உமா கார்கியை 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக உமா கார்கி மீண்டும் கைது செய்யப்பட்டார். நடிகர் விஜய் குறித்தும் தந்தை பெரியார் குறித்தும் இழிவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக உமா கார்கி மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா கார்கியை கடந்த ஜூன் 24ஆம் தேதி கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி சென்னை அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட உமா கார்கி, விஜய் மக்கள் இயக்கத்தினரின் புகார் தொடர்பாகவும் சென்னை காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை, கோவை என இரு மாவட்ட வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால், உமா கார்கி கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications