காலை இட்லி, பொங்கல்.. மதியம் லெமன் சாதம்.. அப்படியே ரோஸ் மில்க்.. வேலுமணி வீடு அருகே ஒரே தள்ளுமுள்ளு
கோவை: கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அதிமுக தொண்டர்களுக்கு உணவு பொட்டலங்கள், டீ விநியோகிக்கப்பட்டது.
Recommended Video
வாசலில் அமர்ந்தபடி போராட்டம் அதிமுகவினரின் போராட்டம் தொடர்கிறது. மதியமும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் யாரும் அங்கிருந்து கிளம்பிப் போக வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டனர் அதிமுக தொண்டர்கள்.
எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பாக போராட்டம் நடத்தி வரும் தொண்டர்களுக்கு மாலையில், வெயிலுக்கு இதமாக, ரோஸ்மில்க் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு ரோஸ்மில்க் பாக்கெட்டுகளை வாங்கினர்.
இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களுடன் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

வேலுமணி வீட்டில் ரெய்டு
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புள்ள 53 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில், குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லம், அவரது உறவினர்கள், நண்பர்கள், டெண்டர் பெற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையிலுள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் காலை முதல் இதுவரை வேலுமணியிடம் தொடர்ந்து ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் தகவல் அறிக்கை
வேலுமணிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் சேர்ந்து அதிமுக நிர்வாகிகளை ஆட்டம் காண வைத்துள்ளது.

ஆடிப்போன அதிமுக
முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் அதிகாரம் படைத்தவர் வேலுமணி. அவர் தொடர்புள்ள இடங்களில் சோதனைகள் நடப்பதால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொண்டர்கள் குவிந்தனர்
இது குறித்த தகவல் தொண்டர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேலுமணி வீட்டுக்கு எதிரே நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் காலை முதல் குவிந்தனர். அவர்கள் போலீசாருக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், கோஷங்களை எழுப்பினர். இதே மாதிரியான சூழ்நிலைதான், சென்னை எம்எல்ஏக்கள் விடுதிக்கு எதிரேயும் இருந்தது. வந்த தொண்டர்கள் கிளம்பி சென்று விட்டால் என்ன செய்வது என்று நினைத்த அதிமுக நிர்வாகிகள் அவர்களுக்கு காலை சிற்றுண்டி, தேநீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இட்லி, உப்புமா, பொங்கல்
இட்லி, உப்புமா, பொங்கல் போன்ற டிபன் ஐட்டங்கள் வந்திருந்த தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன. அதிமுக மகளிர் அணி தொண்டர்கள் அங்கேயே வட்டமாக உட்கார்ந்து எல்லாரும் ஒன்று கூடி சாப்பிட்டு கொண்டு இருந்தனர். இதை பத்திரிக்கையாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தபோது அதிமுக நிர்வாகிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படம் பிடிக்க கூடாது என்று சண்டை போட்டனர்.

அனைவருக்கும் சாப்பாடு
தொண்டர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு கிளம்பி விடக்கூடாது அல்லவா, அதனால், மதியம் தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் வழங்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் மதிய சாப்பாடு உண்டு. யாரும் கிளம்பி போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எனவே, அதிமுக தொண்டர்களின் அங்கேயே அமர்ந்து அவ்வப்போது அரசுக்கு எதிராக கோஷம் போடுவதும், அவ்வப்போது காபி உள்ளிட்டவற்றை பருகி கொண்டிருப்பதுமாக காட்சியளித்தனர். பிறகு சொன்னபடியே, மதியம் உணவு வழங்கப்பட்டது. அத்தோடு விடவில்லை. எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பாக போராட்டம் நடத்தி வரும் தொண்டர்களுக்கு வெயிலுக்கு இதமாக மாலையில், ரோஸ்மில்க் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு ரோஸ்மில்க் பாக்கெட்டுகளை வாங்கினர். எனவே, ஆரம்பத்தில் போராட்டக் களமாக இருந்த அந்த இடம், சாப்பாடு வந்தபிறகு பிக்னிக் ஸ்பாட் போல மாறி காட்சியளிப்பதை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications