விஜய் அரசுக்கு முதல் பெரிய டெஸ்ட்.. சென்னை தாண்டி என்ன நடக்கும்? கோயம்புத்தூரின் எதிர்காலம் என்ன?
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது கோயம்புத்தூர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கோயம்புத்தூரின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு ஏற்ப ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகியுள்ளது.
கோயம்புத்தூருக்கான மெட்ரோ திட்டம் மத்திய அரசு கிடப்பில் போட்டு இருக்கும் வேளையில் விஜய் தலைமையிலான அரசு மிகவும் துரிதமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர்.

கோயம்புத்தூர் தென் இந்தியாவின் மிகவும் நம்பிக்கை அளிக்கும் நகர வளர்ச்சி பகுதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தொழில் முனைவோரின் முதலீட்டு விருப்பத்தில் துவங்கி உற்பத்தித் துறை, கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இணைந்து உயர்தர வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகரமாக கோயம்புத்தூர் திகழ்கிறது.
குறிப்பாக கடந்த 5 வருடத்தில் சரவணம்பட்டி, அவினாசி சாலை மற்றும் கலப்பட்டி போன்ற பகுதிகளில் ரியல் எஸ்டேட் செயல்பாடுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வளர்ச்சி நகரத்தின் பொருளாதாரத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது.
இதேவேளையில் லாக்டவுன் காலத்திற்கு பின்பு கோயம்புத்தூர்-க்கு அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்கள் தனது அலுவலகத்தை அமைத்து வர்த்தகத்தை வரிவாக்கம் செய்து வருகிறது. ஆனால் கோயம்புத்தூரில் தற்போது போதுமான அலுவலக இடங்கள் இல்லை என்பதால் புதியாக வரும் நிறுவனங்களுக்கு இடம் பற்றாக்குறை காரணமாக வேக நகரங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இதனால் அலுவலக ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு வேகமாக ஒப்புதல், ஆய்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ரியல் எஸ்டேட் துறையின் மிகப்பெரிய பிரச்சனையாக தற்போது அனுமதி தாமதங்கள் பார்க்கப்படுகின்றன.
ஒரு சுற்றுச்சூழல் அனுமதி பெற குறைந்தது ஐந்து மாதங்கள் வரை ஆகிறது என்றும், தீயணைப்பு துறை அனுமதிக்கு மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக தொழில்துறையினர் கூறுகின்றனர். மேலும் 15 முதல் 16 வரை "No Objection Certificate" (NOC) பெற வேண்டியிருப்பது பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்கள் தாமதமாக காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட் துறையினர், நகரின் வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்த போதுமான உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அவசியம் என்று கூறுகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துதல், விமான நிலையத்தை விரிவுபடுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவை உடனடியாகச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
விஜய் தலைமையிலான அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது மூலம் கோயம்புத்தூரின் வேகமான வளர்ச்சியை தக்கவைத்து, முதலீட்டாளர்களை தொடர்ந்து ஈர்க்கும்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான டிவிகே அரசு இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினால், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும்.














Click it and Unblock the Notifications