எலும்புக்கூடாக நின்ற கார்.. கோவை பெட்ரோல் பங்கில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், குறிச்சி பகுதியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப வந்த சிஎன்ஜி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தனது நண்பரின் ஆம்னி காரை வாங்கிக் கொண்டு பெட்ரோல் நிரப்புவதற்காக குறிச்சி பாரத் பெட்ரோலியம் பங்கிற்கு நேற்று இரவு சென்றுள்ளார். காரில் பெட்ரோல் நிரப்பிய பின்னர் வாகனத்தை ஆன் செய்துள்ளார். திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அதிர்ச்சியடைந்த சுரேந்திரன் உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

கார் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதிர்ச்சியடைந்த சுரேந்திரன், பெட்ரோல் பங்க் ஊழியர்களும், பொதுமக்களும் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ வேகமாக பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. இந்நிலையில், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பொதுமக்கள் தீயை அணைத்தனர்.
தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பெட்ரோல், கேஸ் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனத்தில் தீப்பிடிக்க என்ன காரணம் என்பது குறித்து தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் நிலவியது.












Click it and Unblock the Notifications