இப்பல்லாம் யார் ஜாதி பார்க்குறா?.. பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படும் அரசு பஸ்.. கோவையில் அட்டூழியம்
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணா நகரில் பட்டியல் சாதியினர் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், சாதி பாகுபாடு காரணமாக 2 மாநகராட்சிப் பேருந்துகள் இப்பகுதிக்கு இயக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தங்கள் பகுதிக்கு வரும் இரண்டு மாநகராட்சிப் பேருந்துகளை இயக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கெம்பனூர் பகுதியில் உள்ள உயர் சாதியினருக்கு சாதகமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ளது அண்ணா நகர். இப்பகுதியில் பட்டியல் சாதி மக்கள் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கெம்பனூர் கிராமத்தில் கடைசி பேருந்து நிறுத்தமாக அண்ணா நகர் உள்ளது. கெம்பனூர் நிறுத்தத்துக்கும், அண்ணாநகருக்கும் இடைவெளி சுமார் 400 மீட்டர் தான்.

கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அண்ணா நகர் பகுதிக்கு 64 டி, S15 A/1C, S3 பி, 21, 21 பி ஆகிய 5 பேருந்துகள் காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இந்த 5 பேருந்துகளையும் அண்ணா நகர் பகுதிக்கு இயக்கப்படாமல் உயர் சாதியினர் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அண்ணா நகர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, 21 மற்றும் 21B பேருந்துகளைத் தவிர மற்ற 3 பேருந்துகள் அப்பகுதிக்கு இயக்கப்பட்டுள்ளன. ஆனால், அதுவும் காலை முதல் இரவு வரை முழுமையாக இயக்கப்படாமல் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அண்ணா நகரில் இருந்து கெம்பனூருக்கு நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டியுள்ளது.
அண்ணாநகரில் இருந்து பேருந்து புறப்படுவதால் பட்டியல் சாதி மக்கள் இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றனர். அவர்கள் அமர்ந்திருக்கும்போது, நாங்கள் எப்படி நின்று கொண்டோ, அல்லது அவர்களுடன் சமமாகவோ அமர்ந்து செல்ல முடியும் என்று கூறி சிலர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், டிஎன்எஸ்டிசி அதிகாரிகள், கெம்பனூரில் இருக்கும் உயர்சாதி பிரிவினரின் பேச்சைக் கேட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இப்பிரச்சனை குறித்து முறையான புகார்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அண்ணா நகர் பகுதி கடைசி பேருந்து நிறுத்தமாக இருப்பதால் அங்கிருந்து பேருந்தில் ஏறும் மக்கள் அமர்ந்து வரும்போது, உயர்சாதி பிரிவினர் எப்படி நின்று கொண்டு வர முடியும் என்று கூறி எங்கள் பகுதிக்கு பேருந்துகளை இயக்காமல் உயர்சாதியினர் மற்றும் டிஎன்எஸ்டிசி அதிகாரிகள் சிலர் தடுத்து வருகின்றனர்.
இதனால், காந்திபுரம் மற்றும் டவுன் ஹாலில் இருந்து இயக்கப்படும் 21 மற்றும் 21B பேருந்துகள் 400 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணா நகருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கெம்பனூர் பகுதி வரை மட்டுமே இயக்கப்படும். உயர்சாதியினர் சிலர் இந்தப் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை எங்கள் பகுதிகளுக்கு எந்தப் பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை. இரவு 9 மணிக்கு 64D பேருந்து எப்போதாவது எங்கள் பகுதிக்கு வரும். 21 மற்றும் 21B பேருந்துகளை அண்ணா நகர் பகுதி வரை இயக்கினால் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து திராவிடர் கழக நிர்வாகி என்.வி.நிர்மல் குமார் கூறுகையில், இப்பிரச்சனை குறித்து நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டோம். சாதி அடிப்படையில் அங்கு பேருந்து செல்ல மறுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. ஓய்வுபெற்ற டி.என்.எஸ்.டி.சி அதிகாரி ஒருவரின் அழுத்தம் காரணமாக இங்கு பேருந்து இயக்கப்படாமல் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் திவிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications