மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? முதல்வர் நிகழ்ச்சியில் 'கடவுளே அஜித்தே'..! கோவை குசும்புயா.!
கோவை: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவரது வருகையின் போது "கடவுளே அஜித்தே" என்று அஜித்குமார் ரசிகர்கள் முழக்கமிட்ட சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு புதிய திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

முதல் கட்டமாக நேற்று முதல் கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளோடு பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு, அனுப்பர்பாளையம் கிராமத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," கோவையில், இங்கு குழுமியிருக்கக்கூடிய மாணவர் சமூதாயத்தைச் சந்திக்கின்றபோது, எனக்கு ஒரு புதிய உணர்ச்சியை, எனர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்பாக, கோவையில் தான் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இன்று, நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நான் நடத்தியிருக்கிறேன்.
இந்த கோவை மாவட்டத்திற்கு, மூன்று முறை நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளில் மாவட்டங்களுக்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கியும். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தும் இருக்கிறேன். 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில், அந்தத் திட்டங்கள் நிலை குறித்து, மண்டலங்கள் வாரியாக அதாவது நான்கு, ஐந்து மாவட்டங்கள் உட்படுத்தி,
ஆய்வுக் கூட்டங்களை நான் நடத்தியிருக்கிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.
தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவைக் கூட்டத்தைக் நடத்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் அறிவித்த அறிவிப்புகள் நிலை குறித்து, அமைச்சர்களை அவர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்ய சொல்லி, அறிவுறுத்திவிட்டு, நம்முடைய தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்க்காக நான் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டேன். அமெரிக்கப் பயணம் முடித்துவிட்டு வந்தவுடனே, அமைச்சர்களை சந்தித்து துறைரீதியான ஆய்வுகளை கோட்டையில் நடத்திக்கொண்டு இருக்கிறேன். இதற்கிடையில், மாவட்டங்கள் வாரியாக நான் நேரடியாக ஆய்வு செய்யலாம் என்று சொல்லி, நான் தொடங்கிய பயணத்தின் முதல் மாவட்டமாக, நான் தேர்ந்தெடுத்தது இந்த கோயம்புத்தூர் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
நேற்று காலையில் இங்கு வந்ததிலிருந்து, நடந்துக்கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்திருக்கிறேன். பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறேன். மாவட்டம் முழுவதும் மக்களுக்குத் தேவையான கோரிக்கைகளை கேட்டிருக்கிறேன். இன்றைக்கு, அதில் ஒரு கட்டமாக, இந்த மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். " என்றார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டு விழா கலந்து கொள்ள மேடைக்கு வரும் போதே திடீரென கல்லூரி மாணவர்கள் 'கடவுளே அஜித்தே' என முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் தவெக முழக்கங்களை எழுப்பினர். கடந்த சில நாட்களாகவே 'கடவுளே அஜித்தே' கோஷம், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கூட கடவுளே அஜித்தே எனக் கூறி அதனை ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர். அதற்கு போட்டியாக விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழக கோஷத்தை எழுப்பி வருகின்றனர். தற்போது அது முதல்வர் நிகழ்ச்சி வரை சென்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications