கோவை 2050 மாஸ்டர் பிளான்.. விமான நிலையம் சுற்றி 2 புதிய சாலை.. வேகமெடுக்கும் விரிவாக்க பணிகள்!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மற்றும் ஏற்றுமதி நகரமாக இருக்கும் கோயம்புத்தூர், தற்போது விமான போக்குவரத்தில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. முன்பெல்லாம் விமான பயணம் என்றாலே தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் சென்னைக்கு தான் வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் 2வது விமான ஹப் ஆக கோயம்புத்தூர் உருவாகியுள்ளது.
2025-26 நிதியாண்டில் மட்டும் கோயம்புத்தூர் விமான நிலையம் சுமார் 34 லட்சம் பயணிகளையும், 13,000 டன் சரக்கு போக்குவரத்தையும் கையாண்டு வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் அதிகப்படியான பயணிகளுக்கு இங்கு சேவை அளிக்க முடியாது என்பது தான்.

கோயம்புத்தூர் டூ உலக நாடுகள்
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து தற்போது சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி போன்ற சர்வதேச நகரங்களுக்கு கோயம்புத்தூரில் இருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பூனே, கோவா உள்ளிட்ட முக்கிய உள்நாட்டு நகரங்களுடனும் விமான இணைப்பு உள்ளது.
இந்த வளர்ச்சியால் கோயம்புத்தூர் விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய உள்கட்டமைப்பு போதாமல் இருப்பது முக்கிய சவாலாக மாறியுள்ளது. இந்த சவாலை ஒரு பெரிய வாய்ப்பாக மாற்றும் வகையில் தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன.
98% நிலம் ஒப்படைப்பு..
கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்காக தேவையான நிலத்தின் 98 சதவீதத்தை தமிழக அரசு ஏற்கனவே இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் இந்திய விமான நிலைய ஆணையமும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து விரிவாக்க பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.
தற்போது எல்லைச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய டெர்மினலுக்கான வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டுமான டெண்டர் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் மாதங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கடுமையான பயணிகள் நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் வந்தால் கூட, பயணிகள் அமர போதுமான இட வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. டாய்லெட் வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் பயணிகள் காத்திருப்பு பகுதிகள் குறைவாக இருப்பது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து உடனடி தீர்வாக இடைக்கால விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய விமான நிலைய டெர்மினல் முழுமையாக கட்டி முடிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், அந்த காலத்தில் பயணிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக ரூ.13 கோடி மதிப்பிலான இடைக்கால விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் கீழ் வருகை பகுதி மற்றும் பயணிகள் வசதிகளுக்காக கூடுதலாக 10,000 சதுர அடி பரப்பளவு உருவாக்கப்படுகிறது. பேக்கேஜ் பெல்டு மேல் பகுதியிலும் புதிய மேசனின் தளம் அமைக்கப்படுகிறது.
இந்த புதிய வசதியில் 375 பயணிகள் ஒரே நேரத்தில் அமரக்கூடிய இருக்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான டாய்லெட்கள், குடிநீர் மற்றும் உணவக வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் கூடுதலாக ஒரு புதிய போர்டிங் கேட் உருவாக்கப்படுவதால், தற்போதுள்ள செயல்திறன் அதிகரிக்கும்.
இந்த இடைக்கால விரிவாக்கத்தின் மூலம், தற்போது ஒரே நேரத்தில் மூன்று உள்நாட்டு விமானங்களை மட்டுமே கையாளும் திறன் கொண்ட கோயம்புத்தூர் விமான நிலையம், விரைவில் ஐந்து உள்நாட்டு விமானங்களையும், ஒரு சர்வதேச விமானத்தையும் ஒரே நேரத்தில் கையாளும் நிலைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டெர்மினல்.. புதிய சாலை..
தற்போது கோவை விமான நிலையம் ரன்வேயின் வடக்கு பகுதியில் இயங்கி வரும் நிலையில், புதிய விரிவாக்கம் ரன்வேயின் தெற்கு பகுதியில் உருவாக்கப்பட உள்ளது.
இதற்காக இரண்டு புதிய சாலை இணைப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவிநாசி சாலையில் லீ மெரிடியன் ஹோட்டல் எதிரே இருந்து ஒரு புதிய சாலை மற்றும் எல்அண்ட்டி பைபாஸ் வழியாக கோயம்புத்தூர் பைபாஸில் இருந்து மற்றொரு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டத்தில் மட்டும் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டப்பட உள்ளது. இதனுடன் பல்மாடி கார் பார்க்கிங், டாக்ஸி நிறுத்தம், பேருந்து நிறுத்தம் மற்றும் சிறிய பஸ் டெர்மினஸ் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் பயணிகள் மற்றும் டிரைவர்களுக்கான உணவகங்கள், டாய்லெட்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன.
இந்த புதிய டெர்மினல் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக இருக்கும். ஒரு மணி நேரத்தில் 3,200 உள்நாட்டு பயணிகளையும், 1,000 சர்வதேச பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2050 வரை கோயம்புத்தூரின் விமான போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா மற்றும் உலகின் முக்கிய நகரங்களுடன் நேரடி இணைப்பை வழங்கும் அளவுக்கு இந்த திட்டம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.















Click it and Unblock the Notifications