சினிமா பாணியில் சேஸிங்.. காரை நடுரோட்டில் மடக்கி 5 பேர் நடத்திய பயங்கரம்! கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில் இன்று அதிகாலை தொழிலதிபரின் காரை மறித்து கத்தியை காட்டி 27 லட்சம் ரூபாயை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூர் பகுதியை சேர்ந்த அவரான் என்பவரின் மகன் அப்துல் சலாம் (50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது தொழில் விஷயமாக அடிக்கடி கோவைக்கு வந்து செல்வது வழக்கம்.
Recommended Video

அப்படி வந்து செல்லும்போது வியாபாரத்திற்கு உரிய பணத்தை எடுத்து செல்வாராம். இவரிடம் மலப்புரம் மாவட்டம் பூக் கோட்டூர் பகுதியை சேர்ந்த அசைன் என்பவரின் மகன் சம்சுதீன் ('42) டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அப்துல் சலாம் தனது காரில் டிரைவர் சம்சுதீனுடன் நேற்று கோவைக்கு வந்தார்.

அதிகாலையில் மறித்தனர்
பின்னர் வியாபாரம் முடிந்த பின்னர் இன்று அதிகாலை கோவையில் இருந்து புறப்பட்டார். அப்போது 27 லட்சம் ரூபாயை அப்துல் சலாம் வைத்து இருந்தார்.
பாலக்காடு சாலை நவக்கரை நந்தி கோவில் அருகே, இன்று அதிகாலை 4:30 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று அப்துல் சலாம் சென்ற காரை வழிமறித்தது.

27 லட்சம் பறிப்பு
அந்த காரில் இருந்து இறங்கி வந்த ஐந்து பேர் அப்துல் சலாமை கத்தியை காட்டி மிரட்டினர். பயந்து போன அப்துல் சலாமையும் அவரது டிரைவர் சம்சுதீனையும் காரில் இருந்து இறக்கி தள்ளி விட்ட அந்த கும்பல் அப்துல் சலாம் வந்த காரையும் அவர் கொண்டு வந்த 27 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்து சென்றது.

உயர் அதிகாரிகள் விசாரணை
இதையடுத்து அப்துல் சலாம் கே.ஜி.சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று நடத்த விபரத்தை தெரிவித்தார். உடனே கே.ஜி.சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் இது குறித்த தகவலை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். பின்னர் செக்போஸ்ட்டிற்கு தகவல் தெரிவித்து தப்பி சென்ற காரை தேட துவங்கினர். தொடர்ந்து கோவை போலிஸ் எஸ்.பி. அருளரசு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

கொள்ளை சம்பவம்
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் அப்துல் சலாம் பணம் கொண்டு செல்லும் விபரம் தெரிந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரேனும் இந்த கொள்ளை சமபவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் இன்று அதிகாலை தொழிலதிபர் காரை பணத்துடன் கொள்ளை அடித்த சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications