போன மாசம் ஹரியானா.. இந்த மாசம் கேரளா.. கோவையை குறிவைக்கும் போதை மாத்திரை.. சிக்கிய கும்பல்
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் சமீபகாலமாக போதை மாத்திரை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அந்த வகையில் கேரளா மாநிலத்தில் இருந்து கோவைக்கு போதை மாத்திரை கடத்தி விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதுமே போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதில் கோவை மாவட்டத்துக்கும் விதிவிலக்கு இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருட்கள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது.

கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை மற்றும் சில உயர் ரக போதை பொருட்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை பல தனிப்படைகளை அமைத்துள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் அதிரடி ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதில் சம்மந்தப்பட்ட ஏராளமானோரை காவல்துறை கைது செய்துவிட்டது. இருப்பினும் போதை மருந்து புழக்கம் குறையாமல், தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இதில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் தொடர்புகளும் உள்ளது. கோவை மாநகரில் போதை மாத்திரை விற்ற கும்பல் ஒன்றை கடந்த மாதம் காவல்துறை கைது செய்தது.
அவர்கள் ஹரியானா மாநிலத்தில் இருந்து போதை மாத்திரை வாங்கி வந்து இங்கு விற்றது தெரியவந்தது. அவர்கள் மூலம் மட்டுமே கோவை மாநகரிவ் சுமார் 20,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்பட்டன. அந்த கும்பல் பிடிபட்ட நிலையில், தற்போது இதே பாணியில் கேரளா மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு போதை மாத்திரை கடத்தி விற்பனை செய்த ஒரு கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.
போதை மாத்திரை பிரச்னை பெரிதாக இருப்பதால் இதற்காக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் கேரளாவில் இருந்து போதை மாத்திரை கடத்துவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதில், தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நியூட்டன், பேரூர் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ராகுல் மற்றும் சௌந்தர்ராஜ், உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமுது அனூஸ், சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராம்பிரசாத், கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த சுதர்சனன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், கேரளாவைச் சேர்ந்த சுதர்சனன் என்பவரிடம் மருத்துவர் பரிந்துரையின்றி போலியான மருந்து சீட்டு மூலம் மாத்திரை வாங்கி கோவையின் பல்வேறு பகுதிகளில் விற்றது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளது. அவர்களிடமிருந்து 300க்கும் மேற்பட்ட மாத்திரைகள் மற்றும் 1.6 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.93,000 ரொக்கம், 8 செல்போன்கள், 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதில் சம்மந்தப்பட்டுள்ள மேலும் சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications