கோவையில் மாற்றி யோசித்த ஊழியர்.. மனைவி பெயரால் 78 லட்சம் சம்பாத்தியம்.. மறக்க முடியாத ட்விஸ்ட்
கோவை: கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த கலைவாணி என்பவர், சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் நடத்தி வருகிறார். தொண்டாமுத்தூர், பேரூர், தென்கரை, ஆலாந்துறை, நீலகிரி மாவட்டம் சோலூர் ஆகிய பகுதிகளில் இவரது நிறுவனம் சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த என்.ராஜன் என்பவர் வரவு செலவு கணக்கு பார்த்து வந்துள்ளார். இவர் அந்த நிறுவனத்தில் 78 லட்சம் மோசடி செய்ததாக கைதாகி உள்ளார்.
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த கலைவாணி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில், "நான் சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனம் மூலம் உள்ளாட்சிகளில் சாலை பணிகளுக்காக ஒப்பந்தம் பெற்று பணிகளை மேற்கொண்டுள்ளேன். தொண்டாமுத்தூர், பேரூர், தென்கரை, ஆலாந்துறை, நீலகிரி மாவட்டம் சோலூர் ஆகிய பகுதிகளில் எங்களது நிறுவனம் சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த என்.ராஜன் (வயது 48) என்பவர் வரவு செலவு கணக்குகளை கவனித்து வந்தார்.

எனக்கு ஆன்லைன் பண பரிவர்த்தனை விவரங்கள் தெரியாததால், வங்கியில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்காக ஊழியர் ராஜனின் செல்போன் எண்ணை வங்கியில் கொடுத்து இருந்தார். உள்ளாட்சிகளில் சாலை பணிகள் முடிந்ததும், பணம் பெறுவது, சாலை பணிக்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பணம் அனுப்புவது போன்ற பணிகளை ராஜன் செய்து வந்தார்.
இந்தநிலையில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், வங்கி கணக்குகளை ஆய்வு செய்தோம். அப்போது ரூ.1 கோடியே 11 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்து இருப்பது தெரியவந்தது. ராஜனிடம் விசாரித்தபோது, ரூ.33 லட்சம் அளவுக்கு மட்டும் கணக்குகளை தெரிவித்தார். ரூ.78 லட்சம் அளவுக்கு பணத்தை மனைவி மற்றும் குடும்பத்தினர் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கலைவா கூறியிருந்தார்.
இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராஜன் மோசடி செய்து இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து ராஜன் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications