அப்பவே அப்படி.. 50 ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாதை மேம்பாலத்தை திறந்த திமுக அரசு!
கோவை: தமிழ்நாட்டின் மிக நீண்ட உயர்மட்ட மேம்பாலத்தை கோவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ள நிலையில், அதே அவினாசி சாலை தொடக்கத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்தியாவில் சுரங்கப் பாதையோடும், ஈரடுக்குப் போக்குவரத்து முறைகளுடன் இணைத்து கட்டப்பட்ட முதல் பாலத்தை கட்டி இருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பெரியதாக 10.1 கிமீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை - அவினாசி ரோடு மேம்பாலத்தால், 45 நிமிட பயணம் 10 நிமிடமாக குறையும். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 4 வழித்தட உயர்மட்ட மேம்பாலமாகவும், 6 வழித்தடத்துடன் கூடிய விரிவுப்படுத்தப்பட்ட தரைவழிச்சாலையாகவும், மொத்தம் 10 வழித்தடங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம், நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும். தமிழ்நாட்டில் முதல் முறையாக, பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை ஆகிய சந்திப்புகளில் இனி போக்குவரத்து நெரிசல் குறையும் என்று பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே 3வது பெரிய உயர்மட்ட மேம்பாலமாக இது அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மிக நீண்ட மேம்பாலமாக அமைந்திருக்கிறது. மதுரையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட மதுரை டூ நத்தம் இடையிலான உயர்மட்ட மேம்பாலம் கூட சுமார் 7 கிமீ தூரம் தான். இதனால் திமுகவினர் பலரும் இதனை பகிர்ந்து பெருமை கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கோவையில் கட்டப்பட்ட பிரம்மாண்ட மேம்பாலம் குறித்த நினைவுகளும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
1974ஆம் ஆண்டு சுரங்கப் பாதையோடும், ஈரடுக்குப் போக்குவரத்து முறைகளுடன் இணைத்து கட்டப்பட்ட முதல் பாலம் கோவையில் அமைந்தது. இதனை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இதுவும் அவினாசி சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த சுரங்கப் பாதை வழியாக ஸ்டாலின் திறந்து வைத்துள்ள அவினாசி உயர்மட்ட மேம்பாலத்திற்கு பயணிக்க முடியும்.
50 ஆண்டுகளுக்கு முன் முதல் சுரங்கப் பாதை பாலம் அமைந்த அதே இடத்தில், தமிழ்நாட்டின் மிக நீண்ட உயர்மட்ட மேம்பாலத்தை திமுக அரசு அமைத்துள்ளது. இதனால் திமுகவினர் அப்பவே அப்படி என்று கொண்டாடி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டாலும், பெரும்பாலான பணிகள் திமுக ஆட்சியில் செய்யப்பட்டு பணிகள் முடித்து திறக்கப்பட்டுள்ளதும் அம்மாவட்ட மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications