கோவையில் தீயை அணைக்க டீ, காபி செலவு 27.52 லட்சம் தான்.. மாநகராட்சியின் அதிர வைக்கும் விளக்கம்
கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீயை அணைக்கும் வேலையை செய்தவர்களுக்கு வெறும் 12 நாட்களுக்கு டீ, காபி செலவுக்கு மட்டும ரூ.27.52 லட்சம் செலவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து டீ காபி விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சியின் மிகப்பெரிய குப்பைக் கிடங்கு வெள்ளலூர் பகுதியில் அமைந்திருக்கிறது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 7000 தெருக்களில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகளும் இப்பகுதியில் கொட்டி தரம் பிரிக்கப்படுகிறது. இங்கு அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இதனால், குப்பைக் கிடங்கில் தீயை அணைக்கும் பணிக்காக வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் நிரந்தரமாகவே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள உரம் தயாரிக்கும் இடத்தின் அருகில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தீ விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த விபத்து ஏப்ரல் 17ம் தேதி வரை நீடித்தது. கட்டுக்கடங்காத தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் இடைவிடாமல் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டு ஒரு வழியாக தீயை அணைத்தனர்.
அண்மையில் இதற்கான செலவினங்கள் குறித்து மாநகராட்சி கணக்கு காண்பித்தது. குப்பைகளை அகற்றுவதற்கான ஜேசிபி, ஜெட்லிங் மெஷின் உள்ளிட்ட வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல், கிரீஸ் ஆயில் ஆகியவற்றுக்கான செலவினம் மற்றும் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை குறித்து கணக்குகள் வெளியாகின.
அந்த பட்டியலில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் 27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661 ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது.
பலரும் ஊழல் நடந்ததாக விமர்சித்த நிலையில், கோவை மாநகராட்சி தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், "வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீப்பிடித்ததில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் பரவி எரிந்தது. அப்போது கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. அதற்கு சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்களும், அதை இயக்க ஒரு வாகனத்திற்கு 14 பேரும் பணிபுரிந்தார்கள்,
அந்த தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய தண்ணீர் லாரிகள் நாள் ஒன்றுக்கு 23 முதல் 42 லாரிகள் வரை பயன்படுத்தினோம். மேலும், தீ உச்சம் பெற்று எரிந்த 12 நாட்களில் தினமும் சுமார் 500 முதல் 600 நபர்கள் சுழற்சி முறையில், 3 குழுக்களாக அமைத்து 24 மணி நேரமும் பணியாற்றி வந்தார்கள்.
தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என மூன்று குழுக்களாக அமைத்து 24 மணி நேரமும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
தீத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குத் தினமும் காலை, மதியம், இரவு 3 வேளைகளும் தரமான உணவு வழங்கப்பட்டது. மேலும் வெயில் காலம் என்பதால் குடிநீர், மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் தீயணைப்பு பணியளார்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தீத்தடுப்பு பணிகளில் செலவினமாக 27.52 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த செலவினங்கள் தற்போது நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் பார்வைக்கும், பதிவிற்கும் வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தீ தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு அதைக் கட்டுக்குள் கொண்டு வந்த மாநகராட்சி ஆணையர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாமன்ற கூட்டத்தில் துணை மேயர், மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications