இதுதாங்க நடந்தது.. வெள்ளலூர் டீ, காபி செலவு சர்ச்சைக்கு கோவை மாநகராட்சி புதிய விளக்கம்
கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்து அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு டீ, காபி செலவு மட்டும் 27.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு கோவை மாநகராட்சி சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 257.04 சதுர அடி கிலோமீட்டர் ஆகும். மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலத்திற்கு 20 வார்டுகள் வீதம் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 22 லட்சத்து 88 ஆயிரத்து 52 ஆகும். மாநகராட்சியின் எல்லைகளில் 5,25,290 வீடுகளும், 42,150 வணிக வளாகங்களும், 879 உணவுகளும், 106 தங்கும் விடுதிகளும் 94 திருமண மண்டபம் மற்றும் 20 காய்கறி சந்தைகளும் உள்ளன.

மேலும், மாநகராட்சியின் தினசரி சந்தைகளும் நடைபெறுகிறது. இதனால், 1,055 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரம் செய்யப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகளை சுமார் 150 மெட்ரிக் டன் வரையிலும் தினமும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் தீப்பிடித்தது. மாலை நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மற்றும் கோடைக் காலம் என்பதாலும் தீ அதிக அளவில் பரவி குப்பை கிடங்கில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகள் எரியத் தொடங்கியது.
இந்த தீ விபத்தின் காரணமாக வெள்ளலூர் சுற்றுப்புறங்களில் அதிக அளவில் புகைமூட்டம் பரவியது. அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தீயையும் மற்றும் தீயினால் ஏற்பட்ட புகையையும் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நாளொன்றுக்கு சரியாக 13 தீயணைப்பு வாகனங்களும், அதனை இயக்க தீயணைப்பு வீரர்களும் என ஒரு வண்டிக்கு சுமார் 14 பேரும் பணிபுரிந்தனர்.
தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய தண்ணீர் லாரிகள் நாளொன்றுக்கு சுமார் 23 எண்ணிக்கையில் இருந்து 42 எண்ணிக்கை வரைக்கும் பயன்படுத்தப்பட்டது.
தீ உச்சம் பெற்ற 12 நாட்களில் தினமும் சுழற்சி முறையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார அலுவலகர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என சுமார் 500 நபர்கள் முதல் 600 நபர்கள் மூன்று குழுக்களாக அமைத்து 24 மணி நேரம் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு நாளொன்றுக்கு ஏற்பட்ட குடிநீர் உணவு , டீ ஆகியவற்றின் செலவு 2,29,037 ஆகும். இதில், நாள் ஒன்றுக்கு மூன்று சுழற்சி முறையாக 3600 சுமார் 1800 நபர்கள் தீத்தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு சராசரியாக நபர் ஒன்றுக்கு குடிநீர், டீ, உணவு உள்ளிட்ட செலவினமாக ஏற்படப்பட்ட செலவு 127 ரூபாய் 39 பைசா ஆகும். இதில், குடிநீர், உணவு, டீ, பிஸ்கட் மற்றும் மோர் ஆகிவிட்டது அடங்கும்.
மேலும், தீத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேளைகளுக்கும் தரமான உணவு வழங்கப்பட்டதுடன், வெயில் காலம் அதிகமானதால் 24 மணி நேரமும் குடிநீர், மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த தீ தடுப்பு பணியில் செலவினமாக 27 லட்சத்து 51 ஆயிரத்து 678 ரூபாய் ஆனது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications