தேங்காய் வியாபாரி பொள்ளாச்சி ரவி ஒரே ஐடியாவில் சம்பாதித்த 60 லட்சம்.. ஏமாந்த கோவை தம்பதி
கோவை: கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த பார்த்திபன் சுஜா தம்பதிக்கு பொள்ளாச்சி குரும்பபாளையத்தை சேர்ந்த ரவி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தேங்காய் வாங்கி விற்றால்,லாபம் கிடைக்கும் எனறு கூறினாராம். இவர்கள் விவசாயிகளிடம் இருந்து தேங்காயை வாங்கி அதை விற்பனை செய்து வந்துள்ளார்கள்.. இந்நிலையில் சுஜாதா, பார்த்திபன் தம்பதியை, தேங்காய் வியாபாரி ரவி சுமார் 60 லட்சம் ஏமாற்றியுள்ளதாக கைதாகி உள்ளார்.
பொதுவாக கூட்டு தொழில் செய்வோருக்கு இடையே நம்பகத்தன்மையும், பரஸ்பரம் நம்பிக்கை அளிக்கும்செயல்கள் இருக்க வேண்டும். யாராவது ஒருவர் ஏமாற்ற வேண்டும் என்று நினைத்துவிட்டால், வணிகம் பாதிக்கப்படுவதுடன், இன்னொருவர் அநியாயமாக பாதிக்கப்படுவார். அப்படி பல இடங்களில் கூட்டாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் மீது உரிய ஆதாரம் இருந்தால் மட்டுமே வழக்கு தொடர்ந்து நீதி பெற முடியும். இல்லாவிட்டால் பெரிய சிக்கல் வந்து மொத்த பணமும் பறிபோய்விடும். கோவையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்..

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த பார்த்திபன் மற்றும் மனைவி சுஜா பார்த்திபன் ஆகிய இரண்டு பேரும் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு பொள்ளாச்சி குரும்பபாளையத்தை சேர்ந்த 42 வயதாகும் ரவி என்பவர் அறிமுகம் ஆனார். பின்னர் அவர் இரண்டு பேரையும் சந்தித்து தேங்காய் வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே நாம் சேர்ந்து விவசாயிகளிடம் இருந்து தேங்காயை வாங்கி அதை விற்பனை செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு 2 பேரும் சம்மதித்தார்களாம்.
இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டில் 3 பேரும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பின்னர் பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை வாங்கி அதை பலருக்கு விற்று வந்திருக்கிறார்கள்.. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சுஜாவும், அவருடைய கணவரும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரிபார்த்திருக்கிறார்கள்.
அப்போது அதில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 166 தேங்காய்களுக்கு கணக்கு இல்லை என்று கூறப்படுகிறது. உடனே அவர்கள் இது தொடர்பாக ரவியிடம் கேட்டபோது அதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பலமுறை கேட்டும் அவர் பதில் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து இரண்டு பேரும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த புகார் குறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் ரவி, 5 லட்சத்து 23 ஆயிரத்து 166 தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கியதாக கணக்கு காட்டி ரூ.59.50 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்த ரவி தலைமறைவானார்.
இதையடுத்து பொள்ளாச்சி ரவியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் ரவியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை 6-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications